செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை பீடத்தில் விரிசலை சரி செய்ய ஆய்வு

செய்யாறு: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையின் ஆதார பீடத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்வது தொடர்பாக அரசு சிற்பக்கலை உலோகவியல் துறை பேராசிரியர் ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் உற்சவ மூர்த்தி சிலையின் (சுவாமி, அம்பாள், முருகர் மூவரும் உள்ளடக்கியது) அடி பீடத்தின் வலது புறம் பின்பக்கத்தில் அலங்காரத்தின் போது அதிகளவு பூ மாலை ஜோடிப்பால் விரிசல் ஏற்பட்டது.

இதனை கோயில் நிர்வாகத்தின் சார்பில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனிநபர் ஒருவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு சோமாஸ்கந்தர் சிலையில் விரிசல் ஏற்பட்டதாக புகார் மனு அளித்திருந்தார். அதன் பேரில் கடந்த 7ம் தேதி திருச்சி சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து சோமாஸ்கந்தர் சிலையை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கோயில் நிர்வாக அலுவலர் நந்தகுமார், ஊழியர்கள், கோயில் குருக்கள் கந்தசாமி மற்றும் சுவாமி சிலையை தூக்கிச் செல்லும் தொழிலாளர்களிடமும், பக்தர்களிடமும் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, சென்னை மாமல்லபுரம் அரசு சிற்பக்கலை மற்றும் கட்டிடக் கலை கல்லூரி உலோகவியல் துறை பேராசிரியர் ராஜேந்திரன் நேற்று காலை செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ஆய்வு செய்தார். அவரது ஆய்வு அறிக்கையின்படி விரிசல் ஏற்பட்ட பீடம் அனுபவம் வாய்ந்த குழுவினர்கள் கொண்டு சீரமைக்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: