கோதாவரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்பே முதல் பணி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிச்சாமி நன்றி

டெல்லி: தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கோதாவரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்பே முதல் பணி எனக்கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றி கூறியுள்ளார். தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி நதிகள் இணைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த நிதின் கட்கரி கடந்த ஜனவரி மாதமே தெரிவித்திருந்தார். அதன்மூலம் வீணாக கடலுக்கு செல்லும் 1,100 டி.எம்.சி. அளவிலான கோதாவரி நதிநீரை உபயோகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 45 டி.எம்.சி.காவிரி தண்ணீருக்காக தமிழ்நாடு கர்நாடகா அரசுகள் இடையே பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில்  1,100 டி.எம்.சி.  தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்று கட்கரி கூறியிருந்தார்.

 எனவே ஸ்டீல் பைப்புகள் மூலம் நதிநீர் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தினால், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய 4 தென் மாநிலங்களில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என கட்கரி தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கோதாவரி-காவிரி நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்ததற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்கரி உறுதியளித்திருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த சுமார் 60 ஆயிரம் கோடி செலவாகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சராக பதவியேற்கப்பின் கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதே எனது முதல்பணி என கூறியிருப்பதாக, தமிழக பாஜக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இரு தினங்களுக்கு முன் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவை நிராகரித்தாலும், தனது கடமையை அது செய்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு நன்றி கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதின் கட்கரிக்கு நெஞ்சார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழல்நிலையில், கோதாவரி , கிருஷ்ணா, காவிரி, பென்னாறு ஆறுகள் இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது என கூறியுள்ள முதல்வர் பழனிசாமி, தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை நதி நீர் இணைப்பு திட்டம் போக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: