திறப்பு விழா நடந்து 2 ஆண்டு ஆகியும் அவல்பூந்துறை படகு இல்லம் செயல்பாட்டுக்கு வரவில்லை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா அவல்பூந்துறை அருகே சோளிபாளையத்தில் 236 ஏக்கர் பரப்பளவில் அவல்பூந்துறை குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு கீழ்பவானி வாய்க்கால் மற்றும் குரங்கன்ஓடையில் இருந்து வரும் உபரிநீரை இதில் தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். அதிக பரப்பளவு கொண்ட இந்த குளத்தை தூர்வாரி சுற்றுலா தலமாக அறிவித்து படகு இல்லம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு சுற்றுலா பண்பாட்டு மற்றும் அறநிலையத்துறை சார்பில் ரூ.1.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான பணிகள் நடந்தது. அவல்பூந்துறை மெயின்ரோட்டில் இருந்து படகு இல்லம் செல்ல ரோடு, பொதுமக்கள் காத்திருப்பு அறைகள, கழிப்பறை வசதிகள், உள்பகுதியில் பூங்கா, விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று போன்ற வசதிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த குளத்தில் படகு விடும் அளவிற்கு தண்ணீர் தேக்க வேண்டும் என்பதால் குளத்தை ஆழப்படுத்தி தூர்வாரினர். ஆனால், கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த இந்த படகு இல்லத்தை கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். படகு இல்லம் திறக்கப்பட்டு 2 ஆண்டு ஆகியும் இதுவரை ஒருமுறை கூட படகு விடப்படவில்லை. படகு இல்லத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கான எந்த கட்டமைப்பும் இல்லாததால் படகு இல்லம் பயனற்று போனது. பொதுமக்கள் யாரும் வராத நிலையில் குடிமகன்கள் இங்கு வந்து மது அருந்தி வருகின்றனர். தற்போது குளத்தில் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கும் நிலையில் ஆங்காங்கே குளத்தின் உள்பகுதியில் முட்புதர்களாக காட்சியளிக்கிறது. குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட ஊஞ்சல் உடைந்து போய் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அதிக பரப்பளவு கொண்ட ஏரியாக இந்த அவல்பூந்துறை சோளிபாளையம் ஏரி உள்ளது. இதனால், இந்த குளத்தை தூர்வாரி சுற்றுலாத்துறை மூலம் படகு இல்லமாக அறிவித்து பொழுதுபோக்கு இடமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவல்பூந்துறை சோளிபாளையம் குளத்தில் படகு விடும் வகையில் நிதி ஒதுக்கி அறிவித்தார். அதற்கு பிறகு ஏரியில் இருந்து மண் அள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு குளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். ஆனால் இதுவரை ஒருமுறை கூட படகு விடப்படவில்லை. படகும் வாங்கவில்லை. இந்த குளத்தின் கரையோர பகுதியில் குழந்தைகள் விளையாடும் வகையில் விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்கப்படும் என்றார்கள். ஆனால் பூங்கா அமைக்கப்பட்ட நிலையில் அங்கு எந்த விளையாட்டு உபகரணங்களும் இல்லை. எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலையில் உள்ளூரைச் சேர்ந்த பொதுமக்களே வர அஞ்சுகின்றனர். படகு இல்லம் உள்ள பகுதியில் முட்புதர்கள் அதிகமாக காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் குடிமகன் இங்கு வந்து கூட்டமாக மது அருந்துகின்றனர்.ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த படகு இல்லத்திற்காக ஏரியில் இருந்த மண்ணை அள்ளி விற்று பணம் சம்பாதித்தது தான் மிச்சம். பயனற்ற நிலையில் உள்ள படகு இல்லத்தை செயல்படுத்த அதிகாரிகளும், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. படகு இல்லத்தில் பூங்கா அமைத்து படகு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: