பாஜக தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தனது உயிர்மூச்சு; வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு

வாரணாசி: பாஜக தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தனது உயிர்மூச்சு என வாரணாசியில் பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசினார். மக்களவை தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 11ம் தேதி முதல் கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியாகின. தேர்தல் நடந்த 542 தொகுதிகளில், ஆளும் பா.ஜ கட்சி தனிப்  பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வென்றது.  பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி கட்சிகள்  மொத்தமாக 352 இடங்களை கைப்பற்றியது.  ஐமு கூட்டணி 91 இடங்களிலும், இதர கட்சிகள் 99 இடங்களை வென்றன. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த மோடி, தே.ஜ கூட்டணியின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதன்படி, ராஷ்டிரபதி பவனில் வரும் 30ம் தேதி மாலை 7 மணிக்கு பதவி ஏற்பு விழாவை நடத்த தே.ஜ கூட்டணி முடிவு செய்துள்ளது. இதையொட்டி அவர் நேற்று குஜராத் சென்று தனது தாயை சந்தித்து ஆசி பெற்றார். பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு வாரணாசி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவும் மோடி முடிவு செய்தார். வாரணாசி தொகுதியில் இருந்து 2014-ல் எம்.பி.யான மோடி மீண்டும் இந்த ஆண்டும் அங்கு போட்டியிட்டு 2-வது முறையாக எம்.பி.யாகி உள்ளார்.

வாரணாசி தொகுதியில் மோடிக்கு சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. வாரணாசி தொகுதியில் உள்ள அனைத்து தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதையடுத்து, தன்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் இன்று வாரணாசி சென்றார். அவரை உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம் நாயக், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் அங்கிருந்து காசி விஸ்வநாதர் ஆலயம் சென்றார்.  

அங்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார். அங்கு 11 மணிவரை சிறப்பு தரிசனம் செய்கிறார். பின்னர் வாராணசியின் முக்கிய பகுதிகளில் சுமார் 5 கி.மீ வரை அவர் ஊர்வலமாகச் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். பிரதமர் மோடி அங்கு வந்துள்ளதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாரணாசியில் வழிநெடுகிலும் ஏராளமானோர் திரண்டு பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து தீன் தயாள் உபாத்யாயா மைதானத்தில் மோடி பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் குறிப்பிடுவன; தம்மை வெற்றி பெற வைத்த வாரணாசி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மக்கள் நம்பிக்கை வைத்த காரணத்தினால் தான் கேதார்நாத் சென்று நிம்மதியாக தியானம் மேற்கொண்டேன்; வெயிலையும் பொருட்படுத்தாமல் வந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும் கூறினார். காசி மக்கள் அளித்த அன்பான வரவேற்பை கண்டு தாம் திக்குமுக்காடி போனேன். வாரணாசி மக்கள் தன் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜக தொண்டர்களின் மகிழ்ச்சிதான் தனது உயிர்மூச்சு என கூறினார். தொண்டர்களின் பலம் தான் இவ்வளவு பெரிய வெற்றியை சாத்தியமாக்கியது;  நான் ஒரு பாஜக தொண்டன், அதன்பிறகு தான் நாட்டின் பிரதமர் எனவும் கூறினார்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி இந்த தேர்தலுக்காக பணியாற்றி இருக்கிறார். வாரணாசியில் பெண்களின் இரு சக்கர வாகன பேரணி நாடு முழுவதும் வைரலாக பரவியது. இந்திய தேசிய அரசியலுக்கு உத்தர பிரதேசம் வழிகாட்டுகிறது. எனக்கு எதிராக இங்கே களம் கண்டவர்களுக்கு நன்றி;  வாரணாசி மக்கள் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். தொண்டர்களின் மன திருப்தியே வெற்றிக்கு காரணம் எனவும் கூறினார்.

Related Stories: