தீவனம் கிடைக்கவில்லை வறட்சியால் மெலியும் கால்நடைகள்

இளையான்குடி : இளையான்குடி பகுதியில் மழை இல்லாமல் தீவன பற்றாக்குறை காரணமாக, கால்நடைகளின் எடை குறைந்து வருவதால், கால்நடை வளர்ப்போர் கவலையடைந்துள்ளனர். இளையான்குடி பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, அதனைச் சார்ந்த கால்நடை வளர்ப்பு தொழில் முக்கியமானதாக உள்ளது. விரையாதகண்டன், அரசடி, சமுத்திரம், முத்தூர், சீவலாதி, சாலைக்கிராமம், கோட்டையூர், சிறுபாலை, முனைவென்றி, அரியாண்டிபுரம் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

கடந்த எட்டு மாத காலமாக போதிய மழை இல்லாத காரணத்தால், விவசாயிகள் பிளாஸ்டிக் பைப், டியூப் மூலமாக நேரிடையாக வயல்களில் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். மழையின்றி தரிசு நிலங்கள், வாய்க்கால், வரப்புகளில், புற்கள், செடி, கொடிகள் வளரவும் இல்லை, தழைக்கவும் இல்லை. பருவமழை பொய்த்து விவசாயம் பாழானது ஒருபுறமிருக்க, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட்டிப்போக தீவனங்கள் இல்லாததால், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

காய்ந்த சறுகுகள், வதங்கிய இலைகள், செடி, கொடியில் உள்ள கட்டைகளை தின்று வருகின்றன. கண்மாய் கரைகளில் வாய்க்கு எட்டிய துரம் உள்ள புளிய மர இழைகளை தின்று வயிற்றை நிரப்புகின்றன. போதியளவு தீவனங்கள் இல்லாததால், ஆடுகள், மற்றும் குட்டிகள் எடை குறைந்து மெலிந்து வருகின்றன. நல்ல தீவனங்கள் சாப்பிட்ட ஆட்டு குட்டிகள், ஒரு வருடத்தில் 15 கிலோ முதல், 17 கிலோ எடையுள்ள ஆடுகளாக வளரும்.

ஆனால் தற்போது ஒரு வருடத்தில் வளர்ந்த ஆடுகள் 10 கிலோ வரைதான் வளர்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கால்நடை உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories: