மத்திய அமைச்சராக இருந்தவர் புரந்தரேஸ்வரி டெபாசிட் இழந்தார்: கணவரும் தோல்வி

திருமலை: மத்திய அமைச்சராக இருந்த என்டிஆர் மகள் புரந்தரேஸ்வரி, மக்களவை தேர்தலில் டெபாசிட் இழந்தார். அவரது கணவரும் தோல்வியை தழுவி உள்ளார்.ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 சட்டப்பேரவை, 22 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக விஜயநகரம், கடப்பா, நெல்லூர் உள்பட 4  மாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், விசாகப்பட்டினம் மக்களவை தொகுதியின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகளான புரந்தரேஸ்வரி பாஜ சார்பில் போட்டியிட்டார். இத்தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எம்விவி.  சத்தியநாராயணா 4 லட்சத்து 36 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பரத் 4 லட்சத்து 32 ஆயிரத்து 492 வாக்குகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். ஆனால் புரந்தரேஸ்வரி 33,892 வாக்குகள் மட்டுமே  பெற்று டெபாசிட் இழந்தார்.

ஏற்கனவே இவர் இதே தொகுதியில் கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது தெலுங்குதேசம் கட்சி கூட்டணியுடன் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.அதேபோல் புரந்தரேஸ்வரியின் கணவர் வெங்கடேஸ்வரராவ் கடந்த 6 மாதத்திற்கு  முன்பு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பச்சூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஏலுரி சாம்பசிவராவ் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின்போது இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் ஒவ்வொரு சுற்றுக்கும் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பெரும்  எதிர்பார்ப்பு எழுந்தது.இறுதியாக 1300 வாக்கு வித்தியாசத்தில் தெலுங்குதேசம் கட்சி ஏலுரி சாம்பசிவராவ் வெற்றி பெற்றார். இதனால் வெங்கடேஸ்வரராவ் தோல்வியை தழுவினார். என்.டி.ராமாராவின் மகள் புரந்தரேஸ்வரி மற்றும் அவரது கணவர் கொள்கை  ரீதியாக வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டாலும் இருவரும் தோல்வியை தழுவியுள்ளனர்.

Related Stories: