தமிழகத்தில் 38 மக்களவை, 22 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிபெற போவது யார்? 8 மணியிலிருந்தே விறுவிறுப்பு

* 45 மையங்களில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு

* 88 பார்வையாளர்கள் நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கான வாக்கு எண்ணிக்கை, 45 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவம், போலீசார் என ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும், வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட 88 பார்வையாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத் ேதர்தலில் பதிவான வாக்குகள் 45 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணிகள் தொடங்கும். வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 17,128 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையங்களிலும் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 30 மேஜைகள் போடப்பட்டு இருக்கும்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இன்று காலை 5 மணிக்கு வர வேண்டும். அவர்கள் எந்த மேஜைகளில் பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து ரேண்டம் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த பணிகள் அனைத்து தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும். காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு மையங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள்  100 சதவீதம் எண்ணி முடித்த பிறகே 5 விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை  சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையை மேற்பார்வையிட இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக 88 அப்சர்வர்களை (பார்வையாளர்கள்) நியமித்துள்ளது.

இதுதவிர அந்தந்த தொகுதிக்கு தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட பொது பார்வையாளரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார். இவர்கள் அனுமதி அளித்த பிறகே ஒவ்வொரு ரவுண்டு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். பொதுமக்களும், தேர்தல் இணையதளத்தில் (https://results.eci.gov.in மற்றும் //elections.tn.gov.in/results2019) முடிவுகளை பார்க்கலாம். அதேபோன்று, செல்போன் அப் (Voter Helpline Mobile App) பதிவிறக்கம் செய்தும் பொதுமக்கள் ஒவ்வொரு சுற்று முடிவுகள், முன்னிலை நிலவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 45 மையங்களிலும் 19 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் (1,520 பேர்), தமிழ்நாடு சிறப்பு காவல்படை 62 கம்பெனி (4,960 பேர்), தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த 36,000 பேர் என மொத்தம் 45,480 பேர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்கள் தவிர வாக்கு எண்ணும் மையங்களின் வெளிபகுதியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க சுமார் 50 ஆயிரம் பேர் என மொத்தம் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதுதவிர அனைத்து மையங்களிலும் வெப்கேமரா பொருத்தப்பட்டு, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்), தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4,014 சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை முழுவதும் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 ரவுண்டு வாக்கு எண்ணிக்கையும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 ரவுண்டு வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். ஒரு ரவுண்டு வாக்கு எண்ணிக்ைக முடிய குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் ஆகலாம். வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்களில் பதிவான வாக்குகளில் வித்தியாசம் ஏற்பட்டால், தேர்தல் ஆணையம் ஏற்கனவே அளித்துள்ள வழிகாட்டு முறையை பின்பற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு சட்டமன்ற தொகுதியில் எண்ணப்படும் 5 விவிபேட் இயந்திரம் எது என்று கம்ப்யூட்டர் ரேண்டம் முறையில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் முன், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தேர்வு செய்து தனியாக வைக்கப்பட்டு விடும். பின்னர் வாக்குப்பதிவு இயந்திரம் முழுவதும் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, ஏற்கனவே இந்த விவிபேட் இயந்திரத்துடன் தொடர்புடைய வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் சரியாக உள்ளதா என சரி பார்க்கப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும். அதேபோன்று, வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், அதற்குண்டான விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். மற்றும் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் குளறுபடி உள்ளதாக முகவர்கள் புகார் அளித்தாலும் அதற்கு பதில் விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ண வாய்ப்புள்ளது. இது அனைத்தும் வாக்குப்பதிவு மையத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி (கலெக்டர்) இறுதி முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: