குழந்தைகள் விற்பனை வழக்கு: அமுதவள்ளி உள்ளிட்ட 7 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நாமக்கல் நீதிமன்றம்

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதவள்ளி உள்ளிட்ட 7 பேரின் ஜாமீன் மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை செய்தது தொடர்பாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (50), அவரது கணவர் ரவிச்சந்திரன், அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் உட்பட 10 பேரை சேலம் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். குழந்தை விற்பனையில் முக்கிய நபராக கருதப்பட்ட அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் கடந்த 16ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். நந்தகுமாரை காவலில் எடுத்து விசாரணை நடத்த நாமக்கல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதையடுத்து நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி அளித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என, சிபிசிஐடி போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஒய்வு பெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட செவிலியர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் 2வது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இடைத்தரகர் லீலா 3வது முறையாகவும், பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் ரேகா, அமுதவல்லியின் சகோதரர் நந்தகுமார், சேலம் கொல்லப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி செவிலியர் ஷாந்தி ஆகியோர் முதன்முறையாக ஜாமீன் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, அமுதவள்ளி உள்ளிட்ட 7 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: