பட்டப்பகலில் ஆட்டுக் குடில்கள் தீக்கிரை பேட்டையில் 48 ஆட்டுக்குட்டிகள் கருகி சாவு

பேட்டை : நெல்லை பேட்டையில் பட்டப்பகலில் ஆட்டுக்குடில்களில் தீக்கிரையானதில் அங்கு அடைக்கப்பட்டிருந்த 48 ஆட்டுக்குட்டிகள் கருகி பரிதாபமாக இறந்தன. நெல்லை பேட்டை  மலையாளமேடு பகுதியில் பிள்ளையன்கட்டளைக்கு சொந்தமான விளைநிலங்கள் உள்ளன. இவற்றை பேட்டையைச் சேர்ந்த சண்முகம் (65) என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். தற்போது அவரது உறவினரான மலையாளமேடு பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி மகன் தங்கம் (38) என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.

இதனிடயே இந்நிலத்தில் மூலக்கரைப்பட்டி அடுத்த பருத்திப்பாட்டை சேர்ந்த இசக்கிமுத்து (51), நம்பி மகன் மாடசாமி (59), அதே பகுதி ரெங்கசமுத்திரத்தை சேர்ந்த பாண்டி (59), நாங்குநேரி புதுக்குறிச்சியை சேர்ந்த பரமசிவம் (57) ஆகியோர் கூட்டாக சேர்ந்து வளர்த்த ஆயிரம் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளுக்காக இரு கொட்டகைகள் அமைத்திருந்தனர்.

 வழக்கம்போல்  நேற்று காலை அருகேயுள்ள தாமரைகுளத்திற்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றபோதும் ஒரு மாதமே ஆன நிலையில் இருந்த 48 ஆட்டுக்குட்டிகளை மட்டும் ஆட்டுக்குடில்களில் அடைத்திருந்தனர்.  இந்நிலையில் இந்த இரு ஆட்டுக்குடில்கள் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கின. இதனால் தீயின் கோரம் தாளாமல் அவற்றில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டுக்குட்டிகள் சிக்கித் தவித்தன.  இதை பார்த்து பதறிய அவ்வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலை அடுத்து திரும்பிவந்த மாடசாமி செய்வதறியாது திகைத்தார். இந்த கோர தீக்கு 48 ஆட்டுக்குட்டிகளும் முற்றிலும் கருகி இரையாயின.

 பின்னர் வந்த தீயணைப்புத் துறை மற்றும் மீட்புக்குழு மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி, பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் மற்றும் வீரர்கள் எஞ்சிய இடங்களில் காணப்பட்ட தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். வருவாய் ஆய்வாளர் அருணாசலம், விஏஓ மஞ்சுளா, கிராம காவலர் கணேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சேத விவரங்களை சேகரித்தனர். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 ஆட்டுக்குடில்கள் மர்மக்கும்பல் தீ வைத்து சென்றதால் எரிந்து தீக்கு இரையானதா? அல்லது ரயிலில், அப்பகுதி வழியாக  சென்ற குடிமகன்கள் பீடி,சிகரெட் துண்டை  அணைக்காமல் அவ்வழியாக தூக்கி எறிந்துவிட்டு சென்றதால் வயல்வெளியில் பற்றிய தீ காற்றில் வேகமாகப் பரவி ஆட்டுக்குடில்களையும் எரித்தனவா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Related Stories: