ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பொள்ளாச்சி :பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, கோடை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில், கடந்த 2018ம் ஆண்டில் தென்மேற்கு பருவழை இருந்தபோது, வனத்தில் உள்ள மரங்கள், செடிகொடிகள் செழிப்புடன் காணப்பட்டது. மேலும், நீரோடைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து அருவிபோல் கொட்டியதுடன்,  ஆங்காங்கே உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் அதிகளவு தேங்கியிருந்தது.

 ஆனால், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து மழையின்றி  நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக பசுமை குறைந்து பெரும்பாலான  இடங்களில் மரங்கள் காய்ந்தது. இதனால், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப், ஆழியார் அருகே குரங்கு அருவி, அட்டக்கட்டி, வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, கடந்த மார்ச் மாதம் வரை பயணிகள் வருகை மிகவும் குறைவானது.

இந்நிலையில், கடந்த மாதம் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அதிலும், வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகமானது. கடந்த மாதம் துவக்கத்தில் பயணிகள் மிகவும் குறைவாகி வெறிச்சோடியதுபோல் இருந்த ஆழியார் மற்றும் டாப்சிலிப் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, கடந்த சிலவாரங்களாக பணிகள் வருகை அதிகமானது

இதில் டாப்சிலிப்பிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர்  அங்குள்ள விடுதிகளில் தங்க, ஆன்லைனில் மூலம் முன்பதிவு செய்துள்ளனர்.

ஜூன் மாதம் 2ம் தேதி வரை என இன்னும் 10 நாட்களுக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளதால், வரும் நாட்களில் இன்னும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories: