துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதாக மலைவாழ் மக்களுக்கு மிரட்டல்: வனத்துறையினர் மீது பரபரப்பு புகார்

தர்மபுரி: ஒகேனக்கல் பண்ணப்பட்டி வனப்பகுதியில் வசிக்கும் இருளர் இன மலைவாழ் மக்களை, துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவோம் என வனத்துறையினர் மிரட்டுவதாக கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். பென்னாகரம் தாலுகா, ஒகேனக்கல் பண்ணப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் பண்ணப்பட்டி வனப்பகுதியில், மூதாதையர் காலத்திலிருந்தே வசித்து வருகிறோம். பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த நாங்கள், கல் குகையில் வசித்து வந்தோம். ஒகேனக்கல் பண்ணப்பட்டியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட வன அலுவலர் பால்ராஜ், 20 தகரம் போட்ட வீடுகளை கட்டிக் கொடுத்தார். அதில் வசித்து வருகிறோம். கடந்த 17ம் தேதி காலை, நாங்கள் குடியிருக்கும் பண்ணப்பட்டி வீட்டிற்கு வனவர் காளியப்பன், வாட்சர் நந்தகோபால் ஆகியோர் வந்து, பண்ணப்பட்டி பகுதியை நீங்கள் காலி செய்ய வேண்டும்.

இல்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள். மேலும், எங்களுக்கு பாதுகாப்பாக இருந்த 3 நாய்களையும் சுட்டுக் கொன்றுவிட்டனர். நேற்று முன்தினமும் நேரில் வந்து மிரட்டி விட்டுச் சென்றனர். எனவே, நாய்களை சுட்டுக் கொன்று, எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வனவர் காளியப்பன், வாட்சர் நந்தகோபால் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. பண்ணப்பட்டி பகுதி மக்கள், பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: