நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு 7 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஓமலூர்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு 7 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று சேலம் வந்தார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும், தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என விவசாயிகளிடம் ஏற்கனவே உறுதி அளித்திருக்கிறோம். ஆனால், ஒரு சிலர் வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2001ல் இருந்து தற்போது வரை, போக்குவரத்து 300 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உள்ளது. இது அடுத்த 6 ஆண்டுகளுக்கு பிறகு 6 லட்சமாக உயரும். அதனை கணக்கிட்டு தான், 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படுகிறது. 8 வழிச்சாலை திட்டத்திற்கு 7 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களும், நாட்டின் நலன் கருதி, தாங்களாகவே முன்வந்து நிலத்தை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் நடப்பாண்டு பருவமழை பொய்த்து, பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையை தீர்க்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னைக்கு அருகில் உள்ள ஏரிகள் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக தண்ணீர் தேவைப்பட்டால் ரயில் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 7 பேர் விடுதலையை பொறுத்தவரை, மக்களின் எண்ணத்திற்கேற்ப அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என, அமைச்சரவையை கூட்டி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீது, ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்து கணிப்பு அல்ல திணிப்பு:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தமிழகத்தை பொறுத்த வரை, கருத்துக் கணிப்புகள் என்றுமே கருத்து திணிப்புதான். கடந்த 2016ம் ஆண்டு, எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் நான் தோற்றுப்போவேன் என கருத்துக் கணிப்பு வெளியானது. ஆனால், 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். அதே போல், தற்போதும் கருத்துக் கணிப்புகளை மீறி, தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும்போது, அமைச்சரவையில் இடம்பெறுவோமா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தெரிவிக்கப்படும் என்றார்.

Related Stories: