தேர்தல் கருத்து கணிப்பு எதிரொலி தங்கம் விலை சவரனுக்கு ரூ 272 குறைந்தது: மேலும் குறைய வாய்ப்பு

சென்னை: மக்களவை தேர்தல் கருத்து கணிப்பு எதிரொலியாக, நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.272 வரை குறைந்துள்ளது. தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்க நிலை காணப்பட்டது. இந்த மாதத்தில் அட்சதிருதியை வந்தது. ஒவ்வொரு அட்சய திருதியை அன்றும் தங்கம் விலை கணிசமான அளவுக்கு உயர்வது வழக்கம். ஆனால், கடந்த 7ம் தேதி அட்சயதிருதியை அன்று கிராமுக்கு ரூ.5 மட்டுமே தங்கம் விலை உயர்ந்தது. கடந்த 14ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.24,680க்கும், 15ம் தேதி ரூ.24,664, 16ம் தேதி ரூ.24,560, 17ம் தேதி ரூ.24,464, 18ம் தேதி ரூ.24,400க்கும் விற்கப்பட்டது. 19ம் தேதி ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. இதில் தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. தங்கம் விலை சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.34 குறைந்து ஒரு கிராம் ரூ.3,016க்கும், சவரன் ரூ.272 குறைந்து ஒரு சவரன் ரூ.24,128க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரன் ரூ.272 அளவுக்கு குறைந்தது நகை வாங்குவோரை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

Advertising
Advertising

தங்கம் விலை தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரனுக்கு ரூ.536 அளவுக்கு குறைந்துள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம் வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் அளித்த பேட்டி: மக்களவை தேர்தல் கருத்து கணிப்பில் மத்தியில் மீண்டும் பாஜ ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பங்கு சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, தொழிற்சார்ந்த பங்கீட்டுக்கான முதலீடுகள் அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இன்னும் விலை குறையத்தான் வாய்ப்புள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: