கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக முதல்வர் பழனிசாமிக்கு தோப்பு வெங்கடாசலம் கடிதம்: அதிமுகவில் அதிர்ச்சி!

சென்னை: கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக முதல்வர் பழனிசாமிக்கு பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கடிதம் எழுதியுள்ளது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்எல்ஏவாக கடந்த 2016ம் ஆண்டு அதிமுக சார்பில தேர்வு செய்யப்பட்டவர் தோப்பு வெங்கடாசலம். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது இவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இவரிடம் இருந்த பொறுப்புகள் பறிக்கப்பட்டன.

இதையடுத்து, தோப்பு வெங்கடாசலத்துக்கு மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தான் வகித்த அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அதிமுகவிலிருந்து விலகுவது குறித்து விரைந்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். தோப்பு வெங்கடாசலத்தின் இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவுக்கு சிக்கல்!

அதிமுகவுக்கு சட்டசபையில் தற்போது பெரும்பான்மை பலம் ஊசலாடும் நிலையில் உள்ளது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 3 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், வாக்கெடுப்பு நடந்தால் அரசு கவிழும் நிலை இருந்தது. அவர்களை சஸ்பெண்ட் செய்தால், பெரும்பான்மைக்கு தேவையான பலத்தை குறைக்க முடியும் என்று கருதி சபாநாயகர் மூலம் அதிமுக மேற்கொண்ட நடவடிக்கை உச்சநீதிமன்றத்தால் தடைபட்டது. வர இருக்கும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளைப் பொறுத்தே, அதிமுக அரசு நீடிக்குமா? என்று கூறமுடியும் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், கட்சி பொறுப்பிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகியுள்ளார். இதையடுத்து, கட்சியில் இருந்து வெங்கடாசலம் விலகினால், சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு மேலும் பலம் குறையும். எனவே, தோப்பு வெங்கடாசலத்தின் இந்த முடிவு அதிமுகவில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்த போது தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என போர்க்கொடி உயர்த்தியிருந்தார். விரைவில் தினகரன் பக்கம் தாவுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை கட்சி தலைமை சமாதானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: