தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், சரியான முடிவுகள் அல்ல: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து

குண்டூர்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் 1999-க்கு பிறகு பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நாட்டின் 17-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. இதில்  தமிழகத்தில் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று  மாலை வெளியிடப்பட்டன. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தை பொறுத்த வரை திமுக கூட்டணி  29 அல்லது அதற்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2014ல் 38 தொகுதிகளையும் வென்ற அதிமுக இம்முறை, ஒற்றை இலக்க தொகுதியிலேயே வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

80 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜ கூட்டணி 58 இடங்களையும், சமாஜ்வாடி - பகுஜன்சமாஜ் கூட்டணி 20 இடங்களையும் வெல்லும் என கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு 16-20 இடங்கள் கிடைக்க  வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும், அங்கு பாஜ முதல் முறையாக கணக்கை தொடங்கி வரலாறு படைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் பாஜ 18-20 தொகுதிகளை கைப்பற்றும் என  கூறப்பட்டுள்ளது. டெல்லியில் 7 தொகுதியிலும் பாஜ வெல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பீகாரில் பாஜ கூட்டணிக்கு 30 இடங்கள் என்றும், காங்கிரசுக்கு 10 இடங்கள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா,  மத்தியப் பிரதேசம், குஜராத்தில் பாஜ அமோக வெற்றி பெறும் என்றே கூறப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு:

இந்த நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூரில் நேற்று நிகழ்ச்சியொன்றில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று பேசினார். அப்போது,  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், தேர்தலின் சரியான முடிவுகள் அல்ல.  முதலில் நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து பெரும்பாலான வாக்கு கணிப்புகள் தவறாகவே இருந்துள்ளன. ஜனநாயகம் வலுப்பட வேண்டுமெனில், மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமெனில் அனைத்து  அரசியல் கட்சிகளும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அண்மைக் காலமாக, அரசியல் நாகரிகம் குறைந்து வருவது கவலையளிக்கிறது.

அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் பண்பாடு சிதைந்துள்ளது. ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரி அல்ல, எதிர்ப்பாளர் மட்டுமே. இந்த அடிப்படை உண்மையைக் கூட அவர்கள் மறந்து  விட்டனர். இதேபோல், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகளும், சட்டப்பேரவைகளில் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் கவலை அளிக்கிறது. அவர்கள், தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்துகொள்வதில்லை.  நாட்டுக்கும், மாநிலத்துக்கும் திறன் மிக்க தலைவரும், நிலையான அரசும் அவசியம். யாராக இருந்தாலும் சரி, இதுதான் அவசியம்” என்றார்.

மம்தா பானர்ஜி கருத்து:

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று அளித்த பேட்டியில், ‘‘கருத்துக் கணிப்புகள் என்பது கிசுகிசுக்களை போன்றது. இதுபோன்றவற்றில்  எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த கருத்துக்கணிப்புகள் மூலம் பல்லாயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதுதான் அவர்களின் திட்டம். எல்லா எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக இணைந்திருந்து வலிமையாக நிற்க வேண்டும்’’  என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: