அன்னதான கூடங்கள் திறப்பு இல்லை சதுரகிரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாத உணவு: கோயில் செயல் அலுவலர் அறிவிப்பு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு விசேஷ நாட்களில் வரும் பக்தர்களுக்கு பிரசாத உணவு வழங்கப்படுமென கோயில் செயல் அலுவலர்  சிவராமசூரியன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 16ம் தேதி முதல் நாளை (மே 19) வரை, பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. சதுரகிரிக்கு வரும் பக்தர்கள் குடிநீர் மற்றும் அன்னதானக்கூடங்கள் மூடப்பட்டதால் உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, குடிநீர், உணவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர்  சிவராமசூரியன் கூறியதாவது: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் கடை வைத்துள்ளவர்கள், பூஜை  பொருட்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

உணவுப்பொருட்கள்  விற்பனை செய்ய அனுமதியில்லை. கடைகளில் காஸ் சிலிண்டர்  பயன்பாட்டுக்கும் அனுமதியில்லை. இதனால் அன்னதான கூடங்களை திறக்க அனுமதிக்க முடியாது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பொங்கல்,  புளியோதரை, தயிர்சாதம், லெமன் சாதம், வெண்பொங்கல் உள்ளிட்டவை கோயில்  நிர்வாகம் மூலம் பிரசாதமாக வழங்கப்படும். விசேஷ நாட்களில் தொடர்ந்து  பிரசாதம் வழங்கப்படும்.  பவுர்ணமி தினத்தன்றும், அதற்கு மறுநாளும்  காலையிலிருந்து மாலை வரை பிரசாதம் வழங்கப்படும். பக்தர்களுக்கு  தேவையான குடிநீர் மட்டும் கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதியும்  செய்யப்பட்டுள்ளது. கோயிலிலிருந்து கோணதலைவாசல் முன்பு வரை 5 இடங்களில்  பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: