தொடர்ந்து 2வது நாளாக பங்குச்சந்தைகள் அபாரம்

மும்பை: பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வது நாளாக நேற்று ஏற்றம் பெற்றன. அமெரிக்கா- சீனா இடையே வர்த்தகப்போர், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் காரணமாக பங்குச்சந்தைகள் கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து 9 நாட்கள் சரிவை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ8.53 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடு 1,940.73 புள்ளிகள் சரிந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பை பங்குச்சந்தை 279 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை 100 புள்ளிகளும் ஏற்றம் கண்டன. தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் பங்குச்சந்தைகள் அபாரமாக உயர்ந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 537.29 புள்ளிகள் அதிகரித்து 37930.77 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 150.05 புள்ளிகள் உயர்ந்து 11,407.15 ஆகவும் இருந்தன. வங்கிகள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவன பங்குகள் ஏற்றம் அடைந்தன. சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக மோதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை திருப்பப்பெற்றது போன்ற பாதக அம்சங்கள் இருந்தாலும், நாளை தேர்தல் கணிப்புகள் வெளியாக உள்ளதால் இதை எதிர்நோக்கி பங்கு வர்த்தகம் உற்சாகமாக நடைபெற்றது என நிபுணர்கள் தெரிவித்தனர்.

Related Stories: