புதிய அரசை உருவாக்குவதில் ராகுல் முக்கிய பங்காற்றுவார்: தேஜஸ்வி யாதவ் பேட்டி

‘‘இந்த மக்களவை தேர்தலில் மெகா கூட்டணி வெற்றி பெரும், மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் ராகுல் முக்கிய பங்காற்றுவார்’’ என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பீகாரில் தே.ஜ கூட்டணிக்கு எதிராக அமைக்கப்பட்ட மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இதர சிறு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டுள்ளன. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 20 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை அலட்சியப்படுத்தியவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். மத்திய அரசை அமைப்பதில் உத்தரப் பிரதேசமும், பீகாரும் முக்கிய பங்கு வகிக்கும். மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை நாடு முழுவதும் காணப்படுவதை நான் உணர்கிறேன். மத்தியில் ஆட்சி அமைக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும். தலைமை தாங்குவதில் ராகுல் மிகுந்த பக்குவமான தலைவராக திகழ்கிறார். மோடி அரசின் கொள்கைகளை நன்கு விமர்சிக்கிறார். மத்தியில் புதிய ஆட்சி அமைப்பதில் அவர் முக்கிய பங்காற்றுவார் என நம்புகிறேன்.

இந்தியாவின் பழமையான கட்சியின் தலைவராக ராகுல் உள்ளார். அவரது தலைமையின் கீழ், 5 மாநில முதல்வர்கள் உள்ளனர். அவர் தற்போதைய பிரதமரைவிட எந்த விதத்தில் பொருத்தமாக இல்லை? இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய இடங்கள் கிடைத்தால், ராகுல் காந்தி பிரதமராக ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கும். பா.ஜ கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதுபற்றி கேட்டால், அது வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துகிறது. கீழ்தரமான யுக்திகளால் எதிர்க்கட்சிகள் பழிவாங்கப்படுகின்றன. லாலு பிரசாத் யாதவ் போன்ற தலைவர்களுக்கு ஜாமீன் போன்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: