பள்ளி மாணவி ஆசையை நிறைவேற்றிய கரூர் கலெக்டர்

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்ட ஆண்டுத்தேர்வில் ஆங்கில பாடத்திற்கான தேர்வில் நீங்கள் எதிர்காலத்தில் யாராக ஆசைப்படுகிறீர்கள் ? உங்களின் முன்மாதிரி மனிதர் யார்? என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவி மனோபிரியா என்ற மாணவி, எதிர்காலத்தில் நான் மாவட்ட கலெக்டராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட கலெக்டர்தான் என்று விடை எழுதியிருந்தார். விடைத்தாளை திருத்திய பள்ளி ஆசிரியர் பூபதி, இது குறித்து கலெக்டர் அன்பழகனுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார். இந்த தகவலை பார்த்த கலெக்டர் அன்பழகன், மாணவி மனோப்பிரியாவின் கனவுக்கு அடித்தளம் மிடும் வகையிலும், அவரது எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அந்த மாணவியை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வர உத்தரவிட்டார்.

இதையடுத்து பள்ளி ஆசிரியர் பூபதி, மாணவி மனோபிரியா மற்றும் விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளில் சிறந்து விளங்கிய பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளை நேற்று கலெக்டர் அலுவலகததிற்கு அழைத்து சென்றார். அங்கு மாவட்ட கலெக்டராக விரும்பிய மனோபிரியாவை பாராட்டிய  கலெக்டர் அன்பழகன், பின்னர் யாரும் எதிர்பாராத வண்ணம், தான் அமர்ந்திருந்த இருக்கையில் மனோபிரியாவை அமர வைத்து, நன்கு படித்து எதிர்காலத்தில் நீங்கள் நினைத்தது போல் ஒரு மாவட்ட கலெக்டராக உருவாகி இது போன்ற இருக்கையில் அமர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கும், நமது நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்றார். பின்னர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கலெக்டர் அன்பழகன் பாராட்டினார்.

Related Stories: