திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்: வருண ஜபமும் நடத்தப்பட்டது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மழை வேண்டி 5 நாட்கள் நடக்கும் சிறப்பு யாகம் தொடங்கியது. நாட்டில் குறிப்பாக தென் இந்தியாவில் போதிய மழை இல்லாமல் வறட்சி தாண்டவமாடும் தற்போதைய நிலையில் மழை வேண்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்தில் இன்று முதல் 5  நாட்களுக்கு காரீரி இஸ்டி யாகம் நடத்தப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் காஞ்சி மடம் இணைந்து நடத்தும் யாகத்துக்காக  தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா  மாநிலங்களில் இருந்து வேத விற்பன்னர்கள்  மற்றும் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் லட்சுமி காந்தம் ஆகியோர் தம்பதியர சமேதராக கலந்து கொண்டனர்.  உடல் முழுவதும் கருமை நிறம் கொண்ட கருப்பு குதிரை, கருப்பு ஆடு  ஆகியவற்றை யாக சாலை முன் நிறுத்தி யாகம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் கூறும்போது, கடந்த 2017ம் ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது மழை வேண்டி தேவஸ்தானம் சார்பில் காரீரி இஸ்டி யாகம், வருண ஜபம் ஆகியவை நடத்தப்பட்டன. அந்த ஆண்டில்  சிறப்பான முறையில் மழை பெய்து  நாடு செழிப்படைந்தது. இந்த ஆண்டிலும் தேவஸ்தானம் நடத்தும் காரீரி இஸ்டி யாகத்தை தொடர்ந்து சிறப்பான முறையில் மழை பெய்து நாடும், நாட்டு மக்களும் வலம் பெறுவார்கள். இதற்காக வருகிற 18ம் தேதி வரை காரீரி இஸ்டி யாகம், வருண ஜபம்,  அமிர்தவர்ஷினி ராக ஆலாபனை ஆகியவை தொடர்ந்து நடைபெறும் என்றார்.அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலின் துணை கோயிலான மலை  அடிவாரத்தில் உள்ள  கபிலேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் அர்ச்சகர்கள் கழுத்தளவு நீரில் நின்றபடி வருண ஜபம் படித்தனர். இதேபோல்,  ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள நாத நீராஞ்சனா மேடையில் மழையை வரவழைக்கும் சக்தி படைத்த அமிர்தவர்ஷினி ராக ஆலாபனை நிகழ்ச்சியையும் நடத்தப்படுகிறது.

Related Stories: