‘அம்பு வன்முறையின் அடையாளம்’ நிதிஷ் கட்சி சின்னத்தை விமர்சித்து லாலு கடிதம்

‘‘அம்பு வன்முறையின் அடையாளம். அதன் ஆயுள் முடிந்துவிட்டது’’ என பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள சின்னத்தை விமர்சித்து லாலு பிரசாத் யாதவ் கடிதம் எழுதி உள்ளார். மக்களவை தேர்தலில் கடைசி மற்றும் 7ம் கட்ட வாக்குபதிவுக்கான பிரசாரம் பீகாரில் களைகட்டி உள்ளது. அங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், மாநில முதல்வருமான நிதிஷ் குமார் தனது பிரசாரங்களில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சின்னமான லாந்தர் விளக்கை கிண்டலடித்து வருகிறார். ‘பீகாரில் அனல் மின்நிலையங்கள் வந்துவிட்டன. எனவே லாந்தர் விளக்கெல்லாம் இனி அவசியமில்லை. அதன் ஆயுள் முடிந்துவிட்டது’’ என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாலு, நிதிஷ்குமாருக்கு திறந்த மடல் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: லாந்தரின் அடையாளம் வெளிச்சம் மட்டுமல்ல, அது அன்பையும், சகோதரத்துவத்தையும் அடையாளப்படுத்துகிறது. ஏழை மக்கள் வாழ்வில் சூளும் இருளை அகற்றும் கருவி அது. உங்களுடைய அம்பு சின்னம், அப்படியல்ல.

அது வன்முறை, ரத்தத்தின் அடையாளம். நவீன ஏவுகணைகள் வந்துவிட்ட இந்த காலத்தில் அம்புக்கெல்லாம் வேலை இல்லை. அதன் ஆயுள் முடிந்துவிட்டது. இனி அம்பை மியூசியத்தில் வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. இன்று மின்சாரத்தால் பல்புகள் வந்திருக்கலாம். ஆனால், சமத்துவமின்மை, அநீதி என்னும் இருளை பல்ப் வெளிச்சத்தால் போக்கி விட முடியாது. அதற்கு நிச்சயம் லாந்தர் விளக்கு வேண்டும். இவ்வாறு லாலு கூறி உள்ளார்.

ஒன்ணு கூடிட்டாங்க:

லாலுவின் சிறைக்கு சென்ற பிறகு கட்சியை வழிநடத்தும் அவரது இளைய மகன்  தேஜஸ்வி யாதவுக்கும், மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இம்முறை தேர்தலில் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் தராததால் தேஜ் பிரதாப் கட்சியின் மாணவர் பிரிவு தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் தராத தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ஆர்ஜேடி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக பிரசாரமும் செய்கிறார். இந்தநிலையில், பாடலிபுத்திரா தொகுதியில் போட்டியிடும் சகோதரி மிசாவுக்காக, சகோதரர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: