கடந்த 2018-19ல் படைப்புழு தாக்கியதால் தமிழகத்தில் 2.50 லட்சம் ஏக்கர் மக்காச்சோளம் உற்பத்தி பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6549 எக்டேர் மக்காச் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2018-19ம் ஆண்டில் திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமெரிக்கவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோள விதையை பயிரிட்டனர். இந்த மக்காச்சோள விதை துளிர் விட்டு பூ பூத்த நேரத்தில் படைப்புழு தாக்க தொடங்கியது. மருந்து தெளித்தும் படைப்புழு சாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு 12 முதல் 13 குவிண்டால் வரும் ஆனால், புழு பாதிப்பால் ஒரு ஏக்கருக்கு 5 குவிண்டால் கூட கிடைக்கவில்லை. இதனால், ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது:  அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மக்காச்சோளம் விதையை வேளாண்துறை பயன்படுத்துமாறு சான்று வழங்கியுள்ளது. ஆனால் இதை நம்பி விவசாயிகள் இந்த விதையை பயிரிட்டனர். ஆனால், இந்த விதை படைப்புழு நோயால் பாதிக்கப்பட்டு 2.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேர்தல் முடிந்த உடன் நிவாரணம் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி வருங்காலங்களில் வேளாண்துறை சார்பில் விதை விற்பனையாளர்களை ஆய்வு செய்து நல்ல மகசூல் கிடைக்கும் வகையில் விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விதைகளை விவசாயத்திற்கு பயன்படுத்த அறிவுரை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தாண்டு முதல் மக்காச்சோளம் ஒரு குவிண்டால் ரூ.1300க்கு கொள்முதல் செய்யப்படுவதற்கு பதிலாக ரூ.2250க்கு கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: