தகுதியான ஆசிரியர்களை நியமிக்காமல் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு ஜூனில் தொடங்குவது சாத்தியமா?

நெல்லை: அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதனை தொடங்கும் போது சில எதிர்ப்புகள் ஏற்பட்டது. ஆயினும் பல அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ஒரு வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் போதிய மாணவர்கள் ஆர்வமுடன் சேருகின்றனர். இந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இதற்காக ஜனவரியில் சென்னை எழும்பூரில் உள்ள மாநில மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்ததுடன் மாணவ-மாணவியருக்கு சீருடை, பாடபுத்தகம், புத்தகப்பை, காலணி உள்ளிட்டவைகளையும் வழங்கினார். மேலும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஜனவரியில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடங்கிய பள்ளிகளில் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் கவனித்தனர். மேலும் தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வகுப்புகளை கவனிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. வழக்கும் தொடரப்பட்டது.

இதனால் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை எல்கேஜிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 2019-20ம் கல்வியாண்டில் அங்கன்வாடி மையங்களுடன் இணைந்த பள்ளிகளிலும் வாய்ப்புள்ள பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கவேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாய்ப்பு, விருப்பம் உள்ள பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடங்கலாம் என ஏற்கனவே அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனிடையே மாவட்டத்திற்கு ஒரு மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி என அறிவிக்கப்பட்ட பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு தொடங்குவதற்காக மாணவ மாணவிகள் சேர்க்கும் பணி நடக்கிறது.

நெல்லை மாவட்டத்தின் மாதிரி அரசுப்பள்ளியான அம்பை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இதுவரை 28 பேர் எல்கேஜி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது போல் பிற பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆயினும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது யார், அங்கன்வாடி அமைப்பாளர்களா, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களா என்ற கேள்வி உள்ளது. இதுபோன்ற பல வினாக்களுக்கு தெளிவான விடை அரசு தரப்பில் இருந்து வராததால் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் எல்கேஜியில் சேர்ப்பது குறித்து பெற்றோர் யோசிக்கின்றனர். எனவே எல்கேஜி வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பது குறித்து அரசு தெளிவான பிரசாரத்தை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தகுதியான ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்

இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், மாநில அளவில் முன்னுரிமை பட்டியல் தயாரித்து தொடக்கப்பள்ளிகளில் உள்ள இடங்களை பணி நிரவல் அடிப்படையில் நிரப்பிவிட்டு கூடுதல் ஆசிரியர்களை எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு பயன்படுத்தலாம் என நீதிமன்றம் ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது. ஆனால் இது எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை. எல்கேஜி மாணவர்கள் சேர்ப்பதற்கு அரசு முழு நெறிமுறைகளை பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் தெளிவாக அறிவிக்கவேண்டும். தொடக்கப்பள்ளிகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். எல்கேஜி வகுப்பிற்கு அதற்கென பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்-ஆசிரியைகள் வேலையின்றி இருக்கிறார்கள். அவர்களை தேவையான அளவு பள்ளி திறக்கும் முன் பணியில் நிரப்பி முறைப்படி தொடங்கினால் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றனர்.

ஏற்கனவே செயல்படும் எல்கேஜி பள்ளிகள்

அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என இப்போது அரசு அறிவித்தாலும் சில அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மாணவர்கள் சேர்க்கப்படுவது ஏற்கனவே உள்ளது. அந்த பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வம் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பு போன்றவைகளுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக தனியாக பயிற்சி பெற்ற அப்பகுதி ஆசிரியர்களை அவர்களே நியமித்து சொந்த செலவில் சம்பளமும் வழங்குகின்றனர். இதுபோன்ற அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில கல்வித்திறன் சிறப்பாக உள்ளது.

Related Stories: