கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு பிஷப் பிராங்கோவுக்கு குற்றப்பத்திரிகை நகல்

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் ஜலந்தர் பிஷப் பிராங்கோவிடம் நேற்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. கேரள மாநிலம், கோட்டயம் குரவிலங்காட்டை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீது பலாத்கார புகார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி இவர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரிக்க வைக்கம் டிஎஸ்பி சுபாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நான்கு மாதங்களுக்கு மேல் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் சிக்கியதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 25 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன் பிஷப் பிராங்கோவிற்கு எதிராக பாலா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் அவர் மீது மானபங்கம், இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளுதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிபட்சம் ஆயுள்தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இந்த குற்றபத்திரிகையை பாலா நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ெதாடர்ந்து குற்ற்ப்பத்திரிகை நகல் மற்றும் ஆவணங்களை வழங்குவதற்காக மே 10ம் தேதி (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி பிராங்கோவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது.  இதையடுத்து நேற்று பிராங்கோ பாலா நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் மற்றும் ஆவணங்கள் வழங்கப்பட்டன. அவரது ஜாமீனும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: