சென்னை விமான நிலையத்தில் 1.2 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட 6 பேர் சிக்கினர்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற சோதனையில் ரூ.39 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்  செய்யப்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 6 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.  சென்னைக்கு வெளி நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாகவும், அதில் பெண் கடத்தல் பயணிகள் ஈடுபட்டிருப்பதாகவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வெளி நாடுகளில் இருந்து வரும் விமானங்களை தீவிரமாக கண்காணித்தனர். இதில் பெண் சுங்க அதிகாரிகளும் ஈடுபட்டனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை  சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த பர்ஜானா (26), மற்றும் மலேசிய நாட்டை சேர்ந்த முகமது யாசின் (33), முகமது ரபி (23) ஆகிய 3 பேர் ஒரு குழுவாக வந்தனர்.

இவர்களை ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் தனித்தனியாக அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது பெண் பயணி உள் ஆடைக்குள் தங்க செயின் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். மற்ற 2 ஆண் பயணிகளின் ஆசனவாய் பகுதியில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். மொத்தம் 3 பேரிடம் இருந்து 960 கிராம் தங்க கட்டிகள், தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 31 லட்சம் ஆகும். இதையடுத்து இவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.  இதற்கிடையே நேற்று அதிகாலை 2.45 மணிக்கு இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர் லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது திருச்சியை சேர்ந்த அரிபா ரோஜா (26), மதினா (43) மற்றும் சென்னையை சேர்ந்த முகமது கனி (33) ஆகிய 3 பேர் ஒரு குழுவாக வந்தனர்.

இவர்களது உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் அவர்களை தனித்தனி அறைகளுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். இதில் 3 பேரும் தங்களது உள் ஆடைக்குள் தங்க செயின்கள் மற்றும் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததைக் கண்டு பிடித்தனர். இதன் எடை 240 கிராம். தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 8 லட்சம். இவர்களையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற சோதனையில் ரூ.39 லட்சம் மதிப்புடைய 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு 3 பெண்கள் உள்பட 6 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: