நெய்வேலி வடக்குத்து ஊராட்சியில் சமூக விரோதிகள் கூடாரமான சிறுவர் விளையாட்டு பூங்கா

நெய்வேலி: நெய்வேலி வடக்குத்து ஊராட்சியில் அண்ணா கிராமம் உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பொழுது போக்கு வசதிக்காக பல வருடங்களுக்கு முன்பு அண்ணா கிராம சாலையில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த பூங்காவில், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் என அனைத்தும் முற்றிலும் சேதமடைந்து விட்டது. மேலும் பூங்காவில் பொதுமக்கள் பயன்படுத்திய சிமெண்ட் பெஞ்சுகள், சிறுவர்கள் பயன்படுத்தும் ஊஞ்சல்கள், இளைஞர்களுக்கான உடற்பயிற்சி கூடம் என அனைத்தும் சேதமடைந்து விட்டன. மின்விளக்குகள் இல்லாததால் பூங்கா இருள் சூழ்ந்தும் காணப்படுகிறது. இதனை மர்மநபர்கள் சிலர் பயன்படுத்திக்கொண்டு இங்கு வந்து மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாகவே மாறிவிட்டது.

பூங்காவை சுற்றிலும் குடியிருப்புகள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் பெண்கள், பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளிட்டோர் பூங்கா வழியாக செல்லும் போது மிகுந்த அச்சத்துடனேயே நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பூங்காவை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுமட்டுமின்றி இந்த பூங்காவுக்கான இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியதாக அருகில் குடியிருக்கும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பூங்கா அருகில் கட்டிடங்கள் கட்டியுள்ள சிலர் பூங்கா இடத்தில் கழிவுநீர் கால்வாய் அமைத்து மதில் சுவரும் எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாகவும் இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டி வருவதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பூங்காவை உடனடியாக ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடத்தை தனிநபர்கள் அபகரித்து உள்ளனரா என்பதை ஆய்வு செய்து, அப்படி தவறு நடந்து இருந்தால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இந்த பூங்காவை மீண்டும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரின் பயன்பாட்டுக்கும் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்று பூங்காவில் உள்ள உபகரணங்கள் அனைத்தையும் சீர்செய்து ஒளிரும் மின்விளக்குகள், பூங்காவை சுற்றி கம்பி வேலிகள் ஆகியவற்றை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: