அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எதிரொலி...சதுரகிரி மலைக்கோயிலில் அறநிலையத் துறை ஆணையர் ஆய்வு

வத்திராயிருப்பு: அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்ததையடுத்து, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இந்து அறநிலையத்துறை ஆணையர் இன்று ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு ஒருநாள் மாதத்திற்கு 8 நாள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால், இடைப்பட்ட நாட்களில் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக முடி காணிக்கை செலுத்தியவர்கள் குளிக்க முடியாமல் பரிதவித்தனர். தண்ணீர் பிரச்னை உட்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி இங்கு இயங்கிய தனியார் அன்னதானக் கூடங்களை மூட அறநிலையத் துறை உத்தரவிட்டது. அன்னதானக் கூடங்கள் மூடப்பட்டதால் உணவுப் பண்டங்களின் விலை தாறுமாறாக எகிறியது. குறிப்பாக ரூ.40க்கு விற்கப்பட்ட தோசை ரூ.100க்கு விற்கப்பட்டது. தண்ணீர் பாட்டில் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதற்கிடையே, இங்கு 40 வருடமாக இயங்கிய காளிமுத்து சுவாமிகள் கஞ்சி மடமும் மூடப்பட்டது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பசியோடு ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என காளிமுத்து சுவாமிகள் கஞ்சிமட டிரஸ்ட் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்து அறநிலையத் துறை ஆணையர் பணிந்திரரெட்டி சதுரகிரி கோயிலில் இன்று ஆய்வு செய்தார். பக்தர்கள் குளிக்கும் இடம், அன்னதானக் கூடங்களை ஆய்வு செய்த பின்னர் அவர் கூறுகையில், ‘குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

Related Stories: