பெண் பயணிகளிடம் தொடர் கொள்ளை சம்பவம் எதிரொலி சேலம் வழியாக செல்லும் 40 ரயில்களில் துப்பாக்கி போலீஸ்: அதிகாரிகள் இரவு ரோந்து

சேலம்:  சேலம் மாவட்டம் சங்ககிரி பக்கமுள்ள மாவெலிப்பாளையம் அருகில் கடந்த 3ம்தேதி இரவு அவ்வழியாக வந்த மைசூர், சேரன், மங்களூரு, ஆலப்புழா ஆகிய ரயில்களில் பயணம் செய்த 10 பெண் பயணிகளிடம் 30 பவுன் நகையை வடமாநில கொள்ளையர்கள் பறித்து சென்றனர். 5ம்தேதியும் அதே இடத்தில் 3 பயணிகளிடம் 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.  தொடர்ச்சியாக நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் ரயில் பயணிகளிடையே பெரும் பீதி ஏற்பட்டது. முதல் நாள் நடந்த கொள்ளையின்போதே  போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருந்தால் 2வது சம்பவம் நடைபெற்றிருக்காது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கடந்த 2 நாட்களுக்கு முன் சேலம் வந்தார். அவர் கொள்ளை சம்பவம் நடந்த மாவெலிப்பாளையம் பகுதியில் 300 போலீசாருடன் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினார்.

2வது நாளாகவும் இந்த தேடுதல் வேட்டை நடந்தது. சேலம் கூடுதல் எஸ்.பி. அன்பு தலைமையில் 2 டிஎஸ்பிக்கள் 200 போலீசார் மாவெலிப்பாளையம் அருகில் ரயில் மெதுவாக செல்லும் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தினமும் இந்த பாதுகாப்பு இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் ரயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலத்தை தினமும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கிறது. ஒவ்வொரு ரயிலுக்கும் 20 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கி ஏந்தியபடி ரயிலில் பாதுகாப்புக்காக செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம், ஈரோடு, திருப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி வரையிலும் இந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கொள்ளையர்களை பிடிக்கும் வரையில் அனைத்து அதிகாரிகளும் இரவு ரோந்து செல்ல வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்டுள்ள சேலம், ஈரோடு ரயில்வே தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் விரைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: