மன்மோகன் சிங் கடும் தாக்கு மோடியின் 5 ஆண்டு ஆட்சி அதிர்ச்சிகரமான பேரழிவு

புதுடெல்லி: ‘‘மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியானது இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும், அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும் அதிர்ச்சிகரமான பேரழிவாக அமைந்தது. இந்த ஆட்சி விரைவில் வெளியேற்றப்பட வேண்டும்’’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மோடி அரசின் 5 ஆண்டு கால ஆட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தோல்விகளின் சோக கதையாகும். 2014ல் அவர் ஆட்சிக்கு வந்தபோது நல்ல நாள் வரும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் 5 ஆண்டு ஆட்சியின் முடிவில் இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், அனைத்து ஜனநாயக அமைப்புக்கும் அதிர்ச்சிகரமானதாகவும், பேரழிவாகவும்தான் அமைந்துள்ளது.

இந்த ஆட்சியில் ஊழல்கள், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மலிந்துள்ளன. சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான். பாகிஸ்தானுடனான உறவிலும் இந்த அரசு பல்வேறு ஏற்ற இறக்கத்தை சந்தித்துள்ளது. பதன்கோட் தாக்குதல் இடத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பை அழைத்து காட்டி மிகப்பெரிய தவறிழைத்தது. மோடி அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக்கிவிட்டது. புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் பலியான சமயத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். இத்தாக்குதல் நாட்டின் உளவுத்துறை தோல்வி அடைந்ததையும், தீவிரவாதத்தை எதிர்த்து போரிடும் அரசின் ஏற்பாடுகள் தோல்வி அடைந்ததையும் சுட்டிக் காட்டுகிறது.

நாட்டின் எதிர்கால பாதுகாப்பு கருதி, பாஜவையும், மோடி அரசையும் புறக்கணிக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இந்தியாவின் பிரதிநிதி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இதில் தனிநபர் ஒருவரால் மட்டுமே 130 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிவிட முடியாது. அவர்களின் பிரச்னைகளை தீர்த்து விட முடியாது. பன்முகத்தன்மை கொண்ட இந்நாட்டில் தனி நபரின் கருத்துக்களை திணிக்க முடியாது. இந்த அரசுக்கு விரைவில் வெளியேற வேண்டிய வழியை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: