வேலூர்: அனைத்து பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் வாயிலாக மட்டுமே மாற்றுச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களின் விவரம் மற்றும் கல்வி பயில்வது தொடர்பான விவரங்கள் அனைத்தும், அனைத்து வகை பள்ளிகளிலும் கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் (இஎம்ஐஎஸ்) அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. அதில் புதிய மாணவர் சேர்க்கை, தேர்ச்சி, வேறு பள்ளிக்கு மாற்றம், நீக்கம் மற்றும் பள்ளி மாணவர்கள் சார்ந்த அன்றாட பணிகள் அனைத்தும் இந்த இணையதளத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பராமரிக்கப்பட்டு, தேர்வு பணிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தொடக்க, இடைநிலை, மேல்நிலைக்கல்வி மாணவர்கள் இடமாறுதல் மற்றும் கல்வி நிறைவின்போது மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும்போது வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ் இந்த ஆண்டு முதல் இஎம்ஐஎஸ் இணையதளத்தின் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.