பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வடிவில் வருகிறது பேஸ்புக்: நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தகவல்

சான்ஜோஸ்: தனிமனித உரிமையில் கவனம் செலுத்தும் சமூக வலைதளமாக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வடிவில் பேஸ்புக் வரப்போவதாக அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் அறிவித்துள்ளார்.பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய இரு சமூக வலைதளங்களை உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இவற்றை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வெறும் பொழுதுபோக்கு  என்பதைத்தாண்டி பேஸ்புக், வாட்ஸ்அப்பில் இன்று அரசியல் பிரசாரங்கள்,  தொழில் நிறுவன விளம்பரங்கள் என பல்வேறு அம்சங்கள் வந்துவிட்டன.அதே நேரத்தில் பேஸ்புக்கில் தனிநபர் தகவல்கள் திருடு போவது, தகவல்கள் பாதுகாப்பின்மை உள்ளிட்டவை பெரும் சர்ச்சையாகியும் வருகின்றன. இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர தொழில்நுட்ப மாநாடு எப்8 என்ற பெயரில்  அமெரிக்காவின் சான்ஜோசில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் பங்கேற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, எப்பி5 என்ற பெயரில் புதிய வடிவத்துடன் பேஸ்புக் வெளிவர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:பேஸ்புக் தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறது. தற்போது தனிமனித உரிமையை பாதுகாப்பதில் நாங்கள் வலுவாக இல்லை. ஆனால் எங்களின் அடுத்த அத்தியாயத்தில் சிறப்பாக செயல்படுவோம் என உறுதி அளித்துக் கொள்கிறேன்.  தனிமனித உரிமையில் கவனம் செலுத்தும் சமூக வலைதளமாக பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மேம்படுத்தப்படும்.

புதிய ஆரம்பம் வித்தியாசமான அனுபவத்தை தரும். பேஸ்புக்கில் தனி குழுக்களை அமைத்து அவர்களுக்குள்ளாக மட்டுமே தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வசதி கொண்டு வரப்படும். அதே போல, பொது வெளியில் தகவல்களையும் பதிவிட  முடியும். இது நமது வீட்டின் அறைக்கும், நகரத்திற்குமான நிலையை ஏற்படுத்தும். தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க தொழில்நுட்ப ரீதியான மேம்பாடுகள் செய்யப்படும். பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பதே எங்களின் முதல்  குறிக்கோள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.பேஸ்புக்கின் இந்த புதிய அப்டேட் மொபைல் ஆப் மிக விரைவில் வெளியாக உள்ளது. இணையதளத்திற்கான அப்டேட் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்த புதிய அத்தியாயத்திற்கு எப்பி5 என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இது  பயன்படுத்த எளிதானதாகவும், தகவல்களை அப்லோடு செய்வதில் விரைவாகவும் செயல்படும் என ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார். இதே போல வாட்ஸ்அப்பில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் சோதனை இந்தியாவில் வெற்றிகரமாக  நடந்திருப்பதைத் தொடர்ந்து பிற நாடுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: