வாரணாசியில் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் மனு தள்ளுபடி: கடைசி நேரத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

வாரணாசி: வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக களமிறக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 4 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. இன்னும் 3 கட்ட தேர்தல் மட்டுமே உள்ளது. கடைசி கட்டத் தேர்தல் மே 19ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இங்கு அவரை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் போட்டியிடவில்லை என அறிவித்தார். இதையடுத்து, கடந்த 2014 தேர்தலில் இத்தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த முன்னாள் வீரர் தேஜ் பகதூர் யாதவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றியபோது, ‘வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியில்லை. தரமற்ற முறை தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதால், இரவில் பட்டினியுடன் தூங்குகிறோம்’ என்ற குற்றச்சாட்டை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், வாரணாசியில் மோடியை எதிர்த்து தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக பகதூர் அறிவித்தார்.

இதற்கான வேட்புமனுவை கடந்த மாதம் 24ம் தேதி தாக்கல் செய்தார். ஆனால், எதிர்பாராத திருப்பமாக சமாஜ்வாடி கட்சி அவரை தனது வாரணாசி தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதைத் தொடர்ந்து, வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான ஏப்ரல் 29ம் தேதி சமாஜ்வாடி சார்பில் வேறொரு வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். ஆனால், இரு வேட்புமனுக்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாக கூறி, அவருடைய வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி நேற்று நிராகரித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுவேன்’

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது பற்றி தேஜ் பகதூர் அளித்த பேட்டியில், ‘‘எனது வேட்புமனுவில் முரண்பாடுகள் இருப்பதாக கடைசி நேரத்தில்தான் எனக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கான விளக்கத்தையும், ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகும், எனது வேட்புமனு தவறாக நிராகரிக்கப்பட்டு உள்ளது. நான் தேர்தலில் போட்டியிடுவதை பாஜ தடுக்கிறது. மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: