திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்கு ஆள் பிடிக்க அத்துமீறும் புரோக்கர்கள்

* நிம்மதியை இழக்கும் பயணிகள்

* கட்டுப்படுத்துமா காவல்துறை?

திருச்சி :  திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் ஆம்னி பஸ்களுக்கு ஆள் பிடிக்க அத்துமீறும் புரோக்கர்களால் பயணிகள் நிம்மதியை இழந்து வருகின்றனர்.  தமிழகத்தின் மையப்பகுதியாக திருச்சி நகரம் விளங்குகிறது. இங்கு உள்ள மத்திய பஸ் நிலையமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும் ஒரு பஸ் நிலையமாக இயங்கி வருகிறது. இங்கிருந்து தென் மாவட்டங்கள், கோவை, திருப்பூர், தேனி, கம்பம், பழனி, சேலம், சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் திருச்சி மத்திய பஸ் நிலையம் 24 மணி நேரமும் ஒரு தூங்கா நகரம் போல் செயல்பட்டு வருகிறது.

அனைத்து பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுவதால் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பஸ்களில் திருச்சிக்கு வந்து இங்கிருந்து தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் இங்கு ஆயிரக்கணக்காக பயணிகள் வந்தவண்ணம் இருப்பதை காண முடியும். இதன் காரணமாக எந்நேரமும் மக்கள் வெள்ளத்தில் நிரம்பியவாறு மத்திய பஸ் நிலையம் காட்சி அளிக்கும். சாதாரண நாட்களிலேயே மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் வரவு அதிகமாக இருக்கும். ஒவ்வொரு வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் குவிந்து விடுவார்கள்.

இப்படி மத்திய பகுதியாக விளங்கும் திருச்சியில் பயணிகள் கூட்டத்தை கருத்தில்கொண்டும் ஆம்னி பஸ்கள் ஆதிக்கம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. இவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்்கனவே பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்த நிலையில் பயணிகள் அவதியடை துவங்கிவிட்டனர். ஏற்கனவே மத்திய பஸ் நிலைய பகுதியில் ஆம்னி பஸ்கள் நிற்கும்போதே 50க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ் புரோக்கர்கள் மத்திய பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் தொல்லை கொடுத்து, அவர்களை நச்சரித்து இம்சை தருவதை வழக்கமாக வைத்திருப்பதை பகல் மற்றும் இரவு நேரங்களில் கொஞ்ச நேரம் மத்திய பஸ்நிலையத்தில் நின்றாலே இதனை காண முடியும்.

சில நேரங்களில் இதனால் பயணிகளுக்கும் புரோக்கர்களுக்கும் தகராறு ஏற்படுவதும் நடந்து வருகிறது. மத்திய பஸ் நிலையத்தில் போலீசார் எநநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் இது போன்ற செயல்களை கண்டுகொள்வதில்லை என்ற குற்றசாட்டு எழுகிறது. இது குறித்து மாநகர சட்ட ஒழுங்கு துணை ஆணையர் நிஷாவிடம் கேட்டபோது, இது பற்றி விசாரிக்க சொல்கிறேன் என தெரிவித்தார். புரோக்கர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக எண்ணும் பயணிகளின் அச்சத்தை போக்கிட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு புரோக்கர்களின்  அத்துமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பயணிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: