ஒகேனக்கல் காவிரியில் ஆபத்தான பகுதியில் குளிப்பதை தடுக்க தானியங்கி எச்சரிக்கை கருவி: தர்மபுரி எஸ்.பி தகவல்

ஒகேனக்கல் :ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆபத்தான பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க, தானியங்கி குரல் எழுப்பும் எச்சரிக்கை  கருவிகள் பொருத்தப்படும் என்று தர்மபுரி எஸ்பி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தர்மபுரி எஸ்.பி ராஜன் கூறியிருப்பதாவது: ஒகேனக்கல் காவிரி  ஆற்றின் கரையோரங்களில், பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்கிறார்கள். இங்கு ஆபத்தான இடங்கள், சுழல் உள்ள இடங்கள் குறித்து, ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் ஆர்வ  மிகுதியால், அந்த பகுதிகளில் குளிக்கும் இளைஞர்களில் சிலர், ஆற்றில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் வேதனைக்கு உள்ளாக்குகின்றன.

  இத்தகைய உயிரிழப்புகளை முழுமையாக தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆபத்தான பகுதிகளை  கண்டறிந்து, அந்த பகுதியில் மின்சாரம் அல்லது சோலார் மூலம் செயல்படும் தானியங்கி குரல்வழி எச்சரிக்கை கருவிகளை (ஆட்டோமெட்டிக்  ஆடியோ அலர்ட் சிஸ்டம்) பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.  மேற்கண்ட பகுதிகளில், ஆற்றின் ஆபத்தான தன்மை குறித்து விளக்கும் வகையில் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 5  மொழிகளில் குரல்களை பதிவு செய்து, சீரான இடைவெளியில் அவற்றை தொடர்ந்து ஒலிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

 இந்த எச்சரிக்கை  ஒலிபரப்பை கேட்பதன் மூலம், சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் ஆபத்தான பகுதிகளை கண்டறிந்து, அத்தகைய பகுதிகளில் குளிப்பதை தவிர்க்க  முடியும். அவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதை உறுதி செய்ய முடியும். ஏற்கனவே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நடந்த விபத்து சம்பவங்களை  சுட்டிக்காட்டி, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பேனர்களையும், ஆங்காங்கே வைக்க உள்ளோம். இவ்வாறு  எஸ்.பி ராஜன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: