பாஜ, மோடி மீது நடவடிக்கை எடுக்காமல் மக்களை ஏமாற்றுகிறது தேர்தல் ஆணையம்: ப.சிதம்பரம் ஆவேசம்

தனியார் செய்தி நிறுவனத்துக்கு மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டி:தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் தோல்விகளை மறைக்கவே, தேர்தல் நேரத்தில்  தேசப்பற்று பற்றி பாஜ பேசி வருகிறது. இந்தியர்கள் அனைவருமே தேசப்பற்று உடையவர்கள். தேசப்பற்று உடைய யாரையும் தேச  விரோதிகள் என்று கூற முடியாது. ஊடகங்களை தவறாக வழி நடத்தி, அர்த்தமற்ற தேசப்பற்று ஐடியாவை விற்க பாஜ முயற்சிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். தற்போது நிலைமை அப்படி  இல்லை. அனைவரும் ஒருவித பயத்துடனே வாழ்கின்றனர். பாஜ.வினரால் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து மீறப்படுகிறது. அது பற்றி தேர்தல் ஆணையத்தில் இதுவரை 37 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10 புகார்களை  மோடி, அமித் ஷா பேசிய வெறுக்கத்தக்க பேச்சு,  பிரிவினைவாத பேச்சுகளின் கீழ் வகைப்படுத்தலாம். தேர்தல் பேரணியின் போது ஆயுதப்படையினரை ஓட்டு கேட்க சொல்லி பிரதமர் மோடி வெட்கமில்லாமல் தூண்டி விடுகிறார். எனவே, அவர் தேர்தல் பிரசாரம் செய்வதற்கு  தடை விதிக்க வேண்டும். ஆனால் அதை செய்யாமல், பாஜவின் இந்த அராஜக போக்கை பார்த்து கொண்டும், மோடியின் பேச்சை கேட்டு கொண்டும் தேர்தல் ஆணையம் அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. இந்திய  மக்களை அது மிகப்பெரிய அளவில் ஏமாற்றி விட்டது.

பாஜ மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. பாஜ அல்லாத அரசு மத்தியில் ஆட்சி அமைக்கும். அது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் ஆட்சியாக இருக்கும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், தேர்தலுக்கு பின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் வந்து இணைவது உறுதி. அப்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி மூன்றாவது முறை  ஆட்சி அமைக்கும்.இதற்கு முன், அதுவும் தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை சோதனை நடந்ததில்லை. இப்போது அது நடக்கிறது. ரகசியத் தகவல் அடிப்படையில் சோதனை நடந்ததாக  கூறுகின்றனர். எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பற்றி மட்டுமே ரகசிய தகவல் கிடைக்குமா? பாஜவினரை குறித்த ரகசிய தகவல் எதுவுமே கிடைக்காதா? பிரதமர் கலந்து கொள்ளும் பேரணிக்கு நிச்சயமாக, ஏறக்குறைய ரூ.10 கோடி  வரை செலவாகும் என தெரிகிறது. அப்படியானால் அதற்கான தொகை எங்கிருந்து வருகிறது? தான் சாதி அரசியல் நடத்தவில்லை என்று கூறும் மோடி பிரதமரான பின், தான் ஒரு `இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை’ (ஓபிசி) சேர்ந்தவன் என்று கையில் பச்சை குத்தி கொண்டு திரிந்தார். ஆனால், தற்போது தனக்கு சாதி  இல்லை என்று கூறி வருகிறார். அவர் என்ன மக்களை முட்டாள்கள் என்று நினைத்து கொண்டிருக்கிறாரா? 2014லும் அதற்கு பின்னரும் டீ விற்றவனை மக்கள் பிரதமராக்கி இருப்பதாக பெருமைப்பட்டு கொள்வதாக பேசிய அவர்,  தற்போது தன்னை டீ விற்றவனாக அடையாளம் காட்டி கொள்வதில்லை. இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: