பனாஜி இடைத்தேர்தலில் பாரிக்கர் மகனுக்கு சீட் கிடைக்குமா?

கோவா மாநில முதல்வராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவர். மோடி அரசில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர். பின்னர், கோவா முதல்வராக பதவியேற்றார். இவர் உடல் நலக்குறைவு  காரணமாக கடந்த மார்ச் 17ம் தேதி உயிரிழந்தார். அவர் எம்எல்ஏ.வாக இருந்த பனாஜி சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு நிறுத்த 2  வேட்பாளர்களின் பெயர்களை பாஜ மேலிடம் பரிசீலித்து வருகிறது. அவர்களில் ஒருவர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர்.

இது குறித்து கோவா பாஜ தலைவர் வினய் டெண்டுல்கர் கூறுகையில், “கட்சியின் பல்வேறு பிரிவினர்களுடன் ஆலோசனை செய்து இரண்டு பேரை தேர்வு செய்துள்ளோம். ஒருவர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர்,  மற்றொருவர் சித்தார்த் கன்கோலிங்கர். இருவர் பெயரும் கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார்” என்றார். உத்பால் (38) அமெரிக்காவில் மேல்படிப்பு முடித்தவர். தற்போது, வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இவரிடம் கேட்டபோது, ‘பாஜ எனக்கு எந்த பொறுப்பை கொடுத்தாலும் ஏற்பதற்கு தயாராக  இருக்கிறேன்...’ என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: