இந்த ஆண்டில் முதல் முறையாக பேரல் 75 டாலரை தாண்டியது கச்சா எண்ணெய்: தேர்தல் முடிந்ததும் அதிர்ச்சி காத்திருக்கு?

புதுடெல்லி: இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் முதல் முறையாக பேரல் 75 டாலரை தாண்டியுள்ளது. ஈரான் மீதான தடையால், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்தலுக்காக விலை  உயர்வை நிறுத்தி வைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், தேர்தல் முடிந்ததும் விலையை உயர்த்த தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்துள்ள அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. ஈரானில் இருந்து ரூபாயாகவே செலுத்தி கச்சா  எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது. ஆனால் இந்த சலுகை மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன்பிறகு ஈரானில் இருந்து  இறக்குமதி செய்ய எந்த நாட்டுக்கும் சலுகை வழங்கப்பட மாட்டாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. தற்போது தேர்தல் நடந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் செய்வதில்லை.  ஆனால், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  கடந்த வாரம் வியாழக்கிழமை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 மாதங்களில் இல்லாத உச்சமாக பேரல் 71.97 டாலராக இருந்தது. கடந்த  திங்கட்கிழமை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 3 சதவீதம் அதிகரித்து 74 டாலராக ஆகியுள்ளது. ஈரானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட சலுகை தொடராது என்று அமெரிக்கா அறிவித்ததே இதற்கு  காரணம். இதன் விளைவாக நேற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை பிரண்ட் கச்சா எண்ணெய் விலை ஏறக்குறைய 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

 சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றம் செய்வதால் விலை உயர்வு  கண்கூடாக தெரிவதில்லை. எனினும், தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்த சூழ்நிலையில், மக்களவை தேர்தல் நடைபெறுவதால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி நீடிக்கிறது. தேர்தலுக்காக தற்காலிகமாக விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளதாக  கூறப்படுகிறது. மே மாதத்தில் இருந்து ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது என்பதால், சர்வதேச சந்தையில் விலை கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டுமின்றி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய்  மதிப்பு சரிந்தாலும் இறக்குமதி செலவு அதிகரித்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வில் முடியும். கச்சா எண்ணெய் விலை இதேபோல் தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தால் தேர்தல் முடிந்ததும் அதிர்ச்சி காத்திருக்க வாய்ப்பு உள்ளது  என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: