தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் சதி உள்ளதா என்பது குறித்து ஏ.கே.பட்நாயக் குழு விசாரிக்கும்: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் சதி உள்ளதா என்பது குறித்து ஏ.கே.பட்நாயக் குழு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக உச்சநீதிமன்ற முன்னாள் பெண் பணியாளர் ஒருவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக ஊடகங்களில் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கடந்த சனிக்கிழமை கூடியது. அப்போது, இந்தப் புகார் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வருத்தம் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. அதில் புகார் அளித்த பெண்ணை வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேசமயம், வழக்கறிஞர் உஸ்தவ் பெயின்ஸ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய்-யை பாலியல் புகாரில் சிக்க வைக்க சூழ்ச்சி நடந்தது என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் புகார் அளித்திருந்தார்.

தலைமை நீதிபதிக்கு எதிராக பொய் வழக்கு ஜோடிக்க தனக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று விசாரணை செய்த நீதிபதிகள், பொய் புகார்கள் குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து நீதிபதி நிஷா தலைமையிலான அமர்வு முன்பு இன்று காலை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டை யாரேனும் திருத்த நினைத்தால் ஒன்று கொல்லப்படுகிறார்கள், இல்லையென்றால் அவர்களை பற்றி அவதூறு பரப்பப்படுகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என்றும் பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது என கடுமையான எச்சரிக்கையை உச்சநீதிமன்றம் முன் வைத்தது. இதனை தொடர்ந்து பிற்பகலில் இது தொடர்பாக தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி, பிற்பகலில் நடைபெற்ற விசாரணையில், முன்னாள் நீதிபதி ஏ.கே பட்நாயக் தலைமையில் இது குறித்து விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டுள்ளனர்.

அதில் சிபிஐ, ஐபி மற்றும் டெல்லி போலீசை சேர்ந்தவர்கள் நீதிபதி பட்நாயக் நடத்தும் விசாரணைக்கு உதவி செய்வார்கள் என தெரிவித்துள்ளது. விசாரணையில் வழக்கறிஞர் பெய்ன்ஸ் அளித்துள்ள புகாரில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பது  தொடர்பாக விசாரிக்க உள்ளனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்-யை பாலியல் புகாரில் சிக்க வைக்க சூழ்ச்சி செய்தது யார்?, அதற்கு உதவியாக இருந்தது யார்? என்பதையும் விசாரணை செய்ய உள்ளது. இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி ரமணா விலகியுள்ளார். நீதிபதிகள் பாப்தே, ரமணா, இந்திரா பேனர்ஜி அடங்கிய அமர்வு ரஞ்சன் கோகோய் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்டது. நீதிபதி ரமணா, தலைமை நீதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று பாலியல் புகார் கூறிய பெண் கடிதம் எழுதியதை அடுத்து விசாரணை அமர்வில் இருந்து ரமணா விலகியுள்ளார். நீதிபதி விலகளால் நாளை நடக்கவிருந்த விசாரணையில் தாமதமாகலாம் என தகவல் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: