இரவு 10 மணிவரை நீடித்தது கேரளாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பு: 77.68 சதவீதம் பதிவு

திருவனந்தபுரம்: கேரளாவில்  நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 10 மணிவரை நீடித்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக 77.68 சதவீதம் வாக்கு பதிவாகி உள்ளது  குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.  

வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் பல பூத்களில் மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. இதேபோல் மாலையில் வாக்காளர்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் இரவு சுமார் 10 மணிவரை வாக்குப்பதிவு நீடித்தது. நீண்ட வரிசையில் காத்து நின்று மக்கள் வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை வாக்குப்பதிவு நிலவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 77.68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

2014ல் நடந்த தேர்தலில் 74.02 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போது கடந்த தேர்தலை விட 3.46 சதவீதம் வாக்குகள் அதிகமாக பதிவாகி உள்ளது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு உள்பட 8 தொகுதிகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. கண்ணூர்  தொகுதியில் அதிகபட்சமாக 83.05 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வயநாடு தொகுதியில் கடந்த 2014ல் நடந்த தேர்தலில் 74.63 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் 80.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது கடந்த தேர்தலை விட 5.33 சதவீதம் அதிகமாகும். திருவனந்தபுரம் தொகுதியில் தான்  குறைவாக 73.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் 68.69 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த முறை கேரளாவின் அனைத்து தொகுதிகளையும் விட இந்த தொகுதியில் குறைவான வாக்குகள் பதிவாகி இருந்தாலும் முந்தைய தேர்தலைவிட 4 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

பத்தனம்திட்டா தொகுதியில் வாக்குப்பதிவு 66.02 சதவீதத்தில் இருந்து 74.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுபோல் அனைத்து தொகுதிகளிலுமே கடந்த தேர்தல்களை விட வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் 17 தொகுதிகளில் மட்டும் 70 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் இம்முறை அனைத்து தொகுதிகளிலுமே 73 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த 30 வருடங்களில் மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதம் ஆகும்.

வாக்குப்பதிவின் போது காசர்கோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கள்ள  ஓட்டுபோடுவதாக எழுந்த புகாரையடுத்து காங்கிரஸ், சிபிஎம் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 15 பேர் காயமடைந்தனர். இதுதவிர கேரளாவில் வேறு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. வாக்களிக்க வரிசையில் நின்றபோது சுருண்டுவிழுந்து 13 பேர் பலியாகி உள்ளனர். ஓட்டுப்பதிவு முடிந்ததும் இரவோடு இரவாக அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்தந்த பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: