நடப்பாண்டு மட்டும் தமிழகம், புதுவையில் 9.5 லட்சம் பேர் புதிதாக வருமான வரி கட்டியுள்ளனர்: தலைமை ஆணையர் தகவல்

திருச்செங்கோடு: தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஆண்டுக்கு 44 லட்சம் பேர் வருமான வரி செலுத்தி வருவதாகவும் நடப்பாண்டில் 9.5 லட்சம் பேர் புதிதாக வரி செலுத்தியுள்ளதாகவும் திருச்செங்கோட்டில் நடந்த அலுவலக திறப்பு விழாவில், தலைமை ஆணையர் கூறினார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு-ஈரோடு பிரதான சாலையில் நேற்று வருமான வரித்துறை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, சென்னை தலைமை முதன்மை ஆணையர் சங்கரன் முன்னிலை வகித்தார். வருமான வரித்துறை புதிய அலுவலகத்தை, தமிழ்நாடு, பாண்டிச்சேரி தலைமை முதன்மை ஆணையர் முரளிகுமார் திறந்து வைத்தார். தொடர்ந்து, அவர் பேசியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரியில் 44 லட்சம் பேர் வருமான வரி செலுத்தி வருகின்றனர். நடப்பாண்டு மட்டும் 9.5 லட்சம் பேர் புதிதாக வருமான வரி கட்டியுள்ளனர். பொதுமக்களிடையே வருமான வரி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிரித்து வருவதே இதற்கு காரணம்.

நாமக்கல் மாவட்டத்தில், 7 தாலுகாக்கள் உள்ளன. வருடத்திற்கு ரூ.330 கோடி வருமான வரியாக கிடைக்கிறது. இதில், மூன்றில் 2 பங்கு திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் தாலுகாவில் இருந்தே கிடைக்கிறது. இப்பகுதியில் 40 ஆயிரம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். இந்த ஆண்டு புதிதாக 6,500 பேர் இதில் இணைந்துள்ளனர்.

சேலம் சரகம் தனது இலக்கை தாண்டி வெற்றிகரமாக செயல்பட்டிருக்கிறது. வருமான வரித்துறையினர் என்று கூறிக்கொண்டு போலியான ஆட்கள் வந்தால் அடையாள அட்டையைக் காட்டுமாறு கேட்கலாம். அல்லது வருமான வரித்துறை அலுவலகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: