சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து...முறைகேடு தொடர்பாக விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வு முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வராக என்.சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நந்தனி உள்ளிட்ட 7 பேராசிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். சென்னையில் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமாக 6 கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுரிகளில் காளிராஜ் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் ஓய்வு பெற்றதையடுத்து என்.சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக  7 பேராசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், முதல்வர் தேர்வு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை என்றும், தனியார் கல்லுரிகளில் ஒழுங்குமுறை பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

மறுபுறம், தேர்வு நடைமுறையில் பங்கேற்காததால் அவர்களுக்கு வழக்கு தொடர அதிகாரம் இல்லை என்று பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை தேர்வு குழு தரப்பில் எதிர்வாதங்களாக முன்வைக்கப்பட்டது. அதேசமயம் பச்சையப்பன் கல்லூரியை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகியை உயர்நீதிமன்றம் நியமித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அவர் ஒரு பதில் மனு தாக்கல் செய்தார். அதில், பல்கலைக்கழக மானிய குழு விதிகளை பின்பற்றாமல் இந்த தேர்வு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல்வர் நியமன நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி என்.சேட்டு நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். குறிப்பாக விதிகளை பின்பற்றி மீண்டும் முதல்வர் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள இடைக்கால நிர்வாகிக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, முதல்வர் தேர்வு நடைமுறை தொடரபாக மனுதாரர் அளித்த புகார்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அனுப்பி வைக்க இடைக்கால நிர்வாகியான ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழல் நடவடிக்கைகள் சமுதாயத்தில் புற்றுநோய் போல பரவுகிறது என்றும், நேர்மையில்லாமல் நியமிக்கப்பட்ட ஒருவர் நேர்மையாக செயல்படுவார் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ஒரு நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட பச்சையப்பா அறக்கட்டளையில் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாவம் இழைத்து வருகிறார்கள் என்று தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: