ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

* நியூசிலாந்து சம்பவத்துக்கு பழிவாங்கவே தாக்குதல்

* நாடாளுமன்றத்தில் அமைச்சர் பரபரப்பு தகவல்
Advertising
Advertising

* இலங்கையில் பலி எண்ணிக்கை 321 ஆனது

கொழும்பு: இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கவே இலங்கையில் தேவாலயங்கள் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தனே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த ஞாயிறு அன்று தேவாலயங்கள், ஓட்டல்கள் என 8 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் கூடியிருந்த மக்கள் நூற்றுக்கணக்கானோர் குண்டுவெடிப்பில் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.

இலங்கை வரலாற்றில் மிக மோசமான இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காமல் இருந்தது. இதனால் நாச வேலையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கியது. சந்தேகத்தின் பேரில் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாட்டின் பாதுகாப்பிற்காக அவசர நடவடிக்கைகள் எடுக்க முப்படைகளுக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

வெடிகுண்டு லாரி: இந்நிலையில், குண்டுவெடிப்பு நடந்து 3வது நாளான நேற்று இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. அந்த அமைப்பின் ‘அமாக்’ செய்தி நிறுவனம் இத்தகவலை உறுதி செய்தது. ஆனாலும், குண்டுவெடிப்பில் ஐஎஸ் அமைப்பு சம்மந்தப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

ஆனால், சர்வதேச அளவில் பல்வேறு நாச வேலைகளை செய்து வரும் ஐஎஸ் அமைப்பு இத்தாக்குதலில் சம்மந்தப்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல் இலங்கை மக்களை, அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதுமட்டுமின்றி, தலைநகர் கொழும்பில் பயங்கர வெடிபொருட்கள் நிரம்பிய கன்டெய்னர் லாரி ஒன்றும் வேனும் சுற்றித்திரிவதாக உளவுத்துறை விடுத்துள்ள தகவலும் பொதுமக்களை மேலும் பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.

இது தொடர்பாக கொழும்பு துறைமுக பாதுகாப்பு இயக்குநரும் நகர போலீசாரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பின் அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. துறைமுகத்தில் முழு சோதனை நடத்தப்படுகிறது. தீவிரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 3 வாகனங்களின் எண்களை போலீசார் வெளியிட்டு, பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இதனால் தொடர்ந்து 3வது நாளாக பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

அமைச்சர் விளக்கம்: இந்த பரபரப்பான சூழலில், இலங்கையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நேற்று கூடியது. அப்போது, தாக்குதல் தொடர்பாக உளவுத்தகவல்கள் முன்கூட்டியே கிடைத்தும் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி எழுப்பின. அப்போது பேசிய பாதுகாப்பு அமைச்சர் விஜேவர்த்தனே, ‘‘நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் கடந்த மாதம் 2 மசூதிகளில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையிலேயே இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இத்தாக்குதலில் உள்ளூர் அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத் உல் முஜாகிதீன் இந்தியா அமைப்பிற்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது’’ என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டார். 45 குழந்தைகள் பலி: இதற்கிடையே குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 321 ஆக அதிகரித்தது. 500க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 45 பேர் குழந்தைகள் என யூனிசெப் உறுதி செய்துள்ளது.

இத்தாக்குதலில் பலியானவர்களின் இறுதிச்சடங்கு முதல் முறையாக நேற்று தொடங்கியது. செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் உறவினர்கள் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர். கொழும்பில் இன்னும் நிலை சீராகாததால், உத்தரவு வரும் வரை மற்ற தேவாலயங்களில் இறுதிச்சடங்கு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, தேசிய துக்க தினமும் நேற்று அனுசரிக்கப்பட்டது. குண்டுவெடிப்பு நடந்த நேரமான 8.30 மணிக்கு 3 நிமிட மவுன அஞ்சலி தொடங்கியது.

நாடு முழுவதும் பலர் சாலைகளில் மவுன அஞ்சலி செலுத்தினர். தாக்குதலுக்கு உள்ளான அந்தோனி தேவாலயத்தில் பலர் மெழுகுவர்த்தி ஏந்தி, பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் நேற்று இரவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடித்த நிமிடம் வீடியோ வெளியானது

செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் மனித வெடிகுண்டாக வந்த தீவிரவாதியின் அதிர்ச்சிகர வீடியோ நேற்று வெளியானது. வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட பெரிய பையை முதுகில் சுமந்தபடி அந்த தீவிரவாதி தேவாலயத்தை நோக்கி நடந்து வருவது போன்று வீடியோ தொடங்குகிறது. சிறுமி ஒருவரின் தலையை தட்டிக் கொடுத்துவிட்டு நடந்து வரும் அந்த தீவிரவாதி, தேவாலயத்தின் பக்கவாட்டு வாசல் வழியாக நுழைகிறான். அப்போது, பிரார்த்தனையில் ஏராளமானோர் ஈடுபட்டிருக்கிறார்கள். அடுத்த சில நொடிகளில் குண்டுவெடித்து சிதறுகிறது. இந்த பயங்கர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

வங்கதேச பிரதமரின் உறவினர் குழந்தை பலி

இலங்கை குண்டுவெடிப்பில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினர் குழந்தையும் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. ஹசீனாவின் உறவினரான ஷேக் பஷுல் கரிம் செலிம், ஆளும் அவாமி லீக் கட்சி தலைவர் ஆவார். இவரது பேரன் 8 வயது ஜயான் சவுத்ரி, குண்டுவெடிப்பு சமயத்தில் தனது தந்தை மொசில் ஹக் சவுத்ரியுடன் ஓட்டலில் காலை உணவு சாப்பிட்டுள்ளான். அந்த ஓட்டலில் குண்டு வெடித்ததில் ஜயான் உயிரிழந்திருப்பது உறுதியாகி உள்ளது. சிறுவனின் உடல் இன்று வங்கதேச தலைநகர் தாகா கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை மொசில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மன்னிப்பு கேட்டது அரசு

கொழும்புவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து பயங்கர தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக சுமார் 14 நாட்களுக்கு முன்பாகவே உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆனால், இத்தகவல் குறித்து இலங்கை அரசு பெரிதாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனரத்னே அளித்த பேட்டியில், ‘‘முன்கூட்டியே எச்சரிக்கை கிடைத்தும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டோம். பாதிக்கப்பட்ட மக்களிடம் இந்த அரசு மன்னிப்பை கேட்கிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: