ராகுல் போட்டியிடும் வயநாடு உட்பட 115 தொகுதியில் நாளை 3ம் கட்ட வாக்குப்பதிவு: களத்தில் அமித் ஷா, முலாயம் சிங், ஜெயபிரதா

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உட்பட 115 மக்களவை தொகுதியில் நாளை 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் அமித் ஷா, முலாயம் சிங், ஜெயபிரதா உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியடுகின்றனர். உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம், கோவா, ஒடிசா, சட்டீஸ்கர், அசாம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 115 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல், குஜராத் சட்டப்பேரவையில் உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல், கோவா சட்டப்பேரவையில் உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், நாளை நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, 3ம் கட்டத் தேர்தல், குஜராத் மற்றும் கோவா சட்டப்பேரவையில் உள்ள சில தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஆகியவற்றுக்கான பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாளைய தேர்தலில் போட்டியிடுவோரில், பாஜ தேசியத் தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே, சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங், சமாஜவாதி மூத்த தலைவர் அசம் கான், பாஜ மூத்த தலைவரும் நடிகையுமான ஜெய பிரதா, மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார், மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மத்திய அமைச்சர் அனந்த் குமார் ஹெக்டே,

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா, கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா உள்ளிட்டோர் மிக முக்கிய பிரமுகராவர். நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதை முன்னிட்டு, தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிலவும் பகுதியில் துணை ராணுவப்படையும் குவிக்கப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் சில தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. வரும் மே 19ம் தேதியுடன் 7ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: