செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் நிறுத்தப்பட்ட பணியால் தொடரும் விபத்துகள்: கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை

செய்யாறு: செய்யாறு நகரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் ஏரிக்கரையை ஒட்டிய சாலை தொடர்ந்து சேதமடைந்து விபத்துகளுக்கும், உயிர்பலிக்கும் காரணமானதால் புதிதாக சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடங்க சாலை பெயர்க்கப்பட்டு பணி நிறுத்தப்பட்டதால் விபத்துகள் தொடர்ந்து வருவதாகவும், இவ்விஷயத்தில் நெடுஞ்சாலைத்துறை மவுனம் காப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் இருந்து காஞ்சிபுரம் வரை உள்ள நெடுஞ்சாலை அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாக விளங்குகிறது. இச்சாலையில் செய்யாறு நகரில் இருந்து புளியரம்பாக்கம் வரையிலான சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஏரிக்கரையை ஒட்டியுள்ள சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள இச்சாலை ஏரிக்கரையை ஒட்டியுள்ளதால் அடிக்கடி சேதமடைவதாக `தினகரன்’’ நாளிதழ் உட்பட பல நாளிதழ்கள் பல முறை சுட்டிக்காட்டியதை அடுத்து இச்சாலையை முழுவதுமாக கான்கிரீட் சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இதற்காக ₹3 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.இப்பணிக்கான டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் கடந்த பிப்ரவரி மாதம் பணியை தொடங்கினார். கான்கிரீட் சாலையாக மாற்ற வேண்டும் என்பதால், ஏற்கனவே போடப்பட்டிருந்த தார்த்தளம் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பெயர்த்தெடுக்கப்பட்டு அப்படியே விடப்பட்டது. இதனால் ஜல்லிக்கற்கள் சாலையெங்கும் சிதறி கிடக்கிறது. இதன்காரணமாக அச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

செய்யாறிலிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், சென்னை, திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் அதிக போக்குவரத்து மிகுந்த இந்த பிரதான சாலையில் சிதறி கிடக்கும் ஜல்லிகற்கள் மீது கனரக வாகனங்கள் செல்லும்போது அதிலிருந்து புழுதி வாரி இறைக்கப்படுகிறது. இதனால் கனரக வாகனங்களை தொடர்ந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக காலையில் இரு சக்கர வாகனங்களில் அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளிகளுக்கு பிள்ளைகளை அவசர, அவசரமாக அழைத்துச் செல்வோர், மருத்துவமனை செல்லும் நோயாளிகள் என பல தரப்பினரும் இந்த சாலையில் மிகவும் சிரமத்துடனே பயணிக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளனர்.

அதோடு டிரக்குகள், டாரஸ் லாரிகள் போன்ற அதிக எடையுடைய கனரக வாகனங்கள் வேகமாக இச்சாலையை கடக்கும் போது சிதறிக்கிடக்கும் ஜல்லிக்கற்கள் பக்கவாட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது தெறித்து விழுந்து பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது. பொதுவாக சாலைப்பணி நடக்கும் போது இடையில் வரும் கல்வெர்ட்டும் பெயர்க்கப்படும். இதற்காக மாற்றுப்பாதை அமைக்கப்படும்.இதற்காக, ‘சாலைப்பணி நடைபெறுகிறது, மாற்று பாதையில் மெதுவாக செல்லவும்’ என்ற வாசகத்ததுடன் சிறியதாக ஒரு எச்சரிக்கை பலகையை பெயருக்கு சாலையின் ஓரமாக வைத்துள்ளனர். அதோடு இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சாலைப்பணி நடைபெறுகிறது என்று எச்சரிக்கை செய்யும் வகையில் இரவில் ஒளிரும் ரிப்ளக்டர் ஸ்டிக்கரோ அல்லது வேறு வகையிலோ எச்சரிக்கை செய்யும் ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெயர்க்கப்பட்ட தார்ச்சாலைக்கு பதிலாக மாற்றுப்பாதையாக புளியரம்பாக்கம் ஏரியில், கரையை உடைத்து தற்காலிக சாலை அமைத்துள்ளனர். இச்சாலையை சரியாக சமன்படுத்தாமல் விட்டதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களால் எழும் புழுதி வேறு வாகனஓட்டிகளை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது.  பல மாதங்களாக சாலைப்பணி நிறுத்தப்பட்ட நிலையில், மக்களை பற்றியும், வாகன ஓட்டிகளை பற்றியும் சற்றும் சிந்திக்காமல் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் எதைப்பற்றியும் கவலையின்றி இருக்கின்றனர். இனியாவது இச்சாலையை விரைந்து சீரமைப்பதற்கான பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: