சொந்த பணத்தை எடுக்க வரிசையில் நின்ற 170 பேரை கொன்றது பா.ஜ ஆட்சி: காங்கிரஸ் எம்பி ராணி கொந்தளிப்பு

காங்கிரஸ் கொண்டு வந்த ஜிஎஸ்டியை பாஜ அமல்படுத்தியது மக்களுக்கு சாதகமா? பாதகமா?

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத ஜிஎஸ்டி வரியை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. ஆனால் அதே வரியை 40 சதவீதம் வரை உயர்த்தி பாஜ அரசு நடைமுறைப்படுத்தியது. இதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை பற்றி யாரும் சொல்ல தேவையில்லை. ராகுல்காந்தியும், நாட்டு மக்களும் கொந்தளித்து எழுந்த பிறகு தான் அதை 18 சதவீதமாக குறைத்தனர். எதையும் ஆராயாமல் மக்களை பாதிக்கும் வகையில் அமல்படுத்தியதில் இருந்தே இந்த ஆட்சியின் லட்சணத்தை புரிந்து கொள்ள வேண்டும். எல்லா தரப்பு வியாபாரிகளும், சிறு தொழில் நிறுவனங்கள், எல்லாவற்றையும் இழுத்து மூடும் அளவுக்கு ஜிஎஸ்டி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தகுதியில்லா அரசு என்பதற்கு அவர்கள் நடைமுறைப்படுத்திய ஜிஎஸ்டி வரியையே உதாரணமாக சொல்லலாம்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்றார்கள், ஆனால் படித்த இளைஞர்கள் இப்போது வேலை கிடைக்காமல் பரிதவிப்பதற்கு காரணம் என்ன?  

இந்த 5 ஆண்டு காலத்தில் 10 கோடி பேருக்கு மத்திய பாஜ அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும். ஆயிரம் பேருக்கு கூட அவர்களால் வேலை வாய்ப்பை பெற்று தர முடியவில்லை. இப்படி வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகள், பொறியாளர்களை எல்லாம் பக்கோடா விற்பது கூட வேலை தான் என்று மோடி கிண்டல் கூட செய்தார். இவர்களை பற்றி அவர் நினைத்ததாக தெரியவில்லை. வெளிநாடுகளில் உள்ள தொழில் நுட்பங்கள், அரசியலமைப்புகளை பார்த்து கூட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம். குற்றங்கள் நடப்பதற்கு வேலையின்மையே காரணம். இவர்களால் கனவுகளை புதைத்து மடிந்து போன இளைஞர்களாக தான் உள்ளனர்.

பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பால் கருப்பு பணம் மீட்கப்பட்டதாக பாஜ பிரச்சாரம் செய்கிறதே?

பணமதிப்பிழப்பினால் ஆட்சி அதிகாரத்தை இழந்த எத்தனையோ நாடுகள் உள்ளது. அதன்படி பார்த்தால் மக்கள் அவர்கள் பணத்தை எடுப்பதற்கு கூட 3 நாட்கள் வரிசையில் நின்ற அவலத்தை எல்லாம் பார்த்தோம். அப்போது 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை யாரும் மறக்க முடியாது. மக்கள் மீது அக்கறை இல்லாத பிரதமரால் தான் இப்படி எல்லாம் நடக்க முடியும். ஆனால் குஜராத்தில் அமித்ஷா போன்றவர்கள் மட்டும் பல ஆயிரம் கோடி பணத்தை ஒரே நாளில் மாற்றினர். ஆனால் ஏழை மக்கள் மட்டும் வரிசையில் நின்று உயிரை விட்ட கொடுமை எல்லாம் பாஜ ஆட்சியில் நடந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாததால் தான் விலைவாசி உயர்ந்துள்ளதா?

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்காமல் விட்டதால் தான் வந்த வினை. எப்படி தினம் தினம் பெட்ரோல் விலை ஏறியதோ அதேபோன்று தான் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தினம் தினம் ஏறிவிட்டது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோலிய பொருட்கள் விலையை குறைக்க மத்திய அரசு முன்வரவில்லை. பொருளாதார பின்னடைவுக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால், மக்கள் அவர்களே தானாக மடிந்து போகும் அவல நிலைக்கு தள்ளிவிட்டுவிட்டனர்.

பிரதமர் மோடி ஆட்சி நடத்தும் முறை என்பது சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக எதிர்கட்சிகள் விமர்ச்சித்துள்ளனரே?

ஏற்கனவே இருந்த காங்கிரஸ் ஆட்சியையும், இப்போது நடந்து கொண்டிருக்கும் பாஜ ஆட்சியையும் உற்று பார்த்தால் தற்போது ஜனநாயகத்துக்கு புறம்பான ஒரு மக்கள் விரோத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக இருந்தனர். கடைகோடியில் இருந்த மக்கள் கூட உயர்கல்வி கற்க வேண்டும் என்று கல்வியில் ஒரு பெரிய புரட்சியையே காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியது. கல்வி கடன் வழங்கியதன் மூலம் அவர்கள் படித்து நாட்டுக்கும் பொருளாதார ரீதியாக உதவியாக இருந்தனர். ரூ.400 கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்பட்ட கல்வி கடனை பாஜ அரசு ரூ.50 கோடியாக குறைத்துவிட்டது. இதனால் ஏழை மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகி வருகிறது.

கவர்ச்சி வாக்குறுதிகள் இந்த தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுக்க வாய்ப்பிருக்கிறதா?

கருப்பு பணத்தை மீட்போம் என்றார். இதுவரை யார் அக்கவுண்ட்டுக்கும் ரூ.15லட்சம் வரவில்லை. கவர்ச்சி அறிவிப்பை மக்களிடம் விதைத்து தான் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இந்த முறை மக்கள் அவர்களை இனம் கண்டு கொண்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் தான் சொன்னதை நிறைவேற்றுவார்கள் என்பதை மக்களுக்கு பாஜ ஆட்சியே உணர்த்திவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: