அதிமுகவை விட கூடுதல் பணம்: 10 தொகுதிகளில் மட்டும் ‘அள்ளிக் கொடுக்கிறது’ அமமுக

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால், கட்சி தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், பல்வேறு பகுதிகளில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தவண்ணம் இருக்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் வைத்த வண்ணம் உள்ளது.

நாடாளுமன்ற தொகுதிகளை போல டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக உள்ள அமமுக 18 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகின்றது. ஏற்கனவே, நாடாளுமன்ற தொகுதிகளில் செலவு செய்ய தொகுதி வேட்பாளர்கள் தயங்கிய நிலையில் டிடிவி.தினகரன் கட்சி பணத்தை வேட்பாளர்களுக்கு கொடுத்தார். நாடாளுமன்ற தேர்தலை விட டிடிவி.தினகரன் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இதனால், 18 தொகுதிகளில் எப்படியாவது 14 தொகுதிகளிலாவது வெற்றிபெற்றே ஆக வேண்டும் என தன்னுடைய வேட்பாளர்களுக்கு ஆலோசனையுடன் இணைந்த உத்தரவையும் போட்டுள்ளார். ஏற்கனவே, ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது 20 ரூபாய் டோக்கன் கொடுத்து வெற்றிபெற்றதாக தினகரன் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதனால், மறுபடியும் டோக்கன் நடைமுறையை பின்பற்றாமல் அதிமுகவை விட கூடுதலாக பணத்தை கொடுத்தாவது வாக்குகளை பெற்றுவிட வேண்டும் என வேட்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 தொகுதிகளை குறிவைத்து டிடிவி.தினகரன் இந்த உத்தரவை போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ஆண்டிப்பட்டி, மானாமதுரை, குடியாத்தம், பெரம்பூர், நிலக்கோட்டை உள்ளிட்ட 10 தொகுதிகளில் அக்கட்சி நிர்வாகிகள் அதிக அளவில் பணவிநியோகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவின் உத்தரவின் பேரில் டிடிவி.தினகரனுக்கு நெருங்கிய முக்கிய குடும்ப உறுப்பினரிடம் இருந்து பணம் பெறப்பட்டு அப்பணம் தேர்தல் பணப்பட்டுவாடாவிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், 10 தொகுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் இது போன்ற பணப்பட்டுவாடாவில் அமமுகவினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுவரையில் இந்த பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: