நாட்டின் அடுத்த பிரதமர் ஆவதற்கு மோடியை விட நிதின் கட்கரி சிறந்த தேர்வாக இருப்பார்: பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கருத்து

மும்பை: நாட்டின் அடுத்த பிரதமராக நரேந்திர மோடிக்கு பதிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை தேர்வு செய்ய வேண்டும் என்று அவ்வப்போது குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் திரையுலகில் இருந்து  நிதின் கட்கரிக்கு ஆதரவாக ஒரு குரல் எழுந்துள்ளது. பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியை காட்டிலும் நிதின் கட்கரி சிறந்த தேர்வாக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளார். அனுராக் காஷ்யப் இது தொடர்பாக டிவிட்டரில், “அடுத்த பிரதமர் ஆவதற்கு பாஜ.வில் நரேந்திர மோடியைக் காட்டிலும் நிதின் கட்கரி சிறந்த தேர்வாக இருப்பார். அரசியலில் இருந்து ஊழலை ஒருபோதும் ஒழிக்க முடியாது. இந்த  விசயத்தில் அனைவருமே ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக மதவாதத்தையும் வெறுப்பு அரசியலையும் ஒழித்துவிட முடியும். அரசியலில் இருந்து வெறுப்புணர்வை நீக்குவதற்கான ஒரே வழி ஒரு கூட்டணி  அரசை தேர்ந்தெடுப்பதுதான். மக்கள் பிரதமருக்காக வாக்களிக்காமல் தங்கள் சொந்த தொகுதியில் நம்பிக்கைக்கு உரிய வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆளும் கட்சியினர் “நானும்  காவலாளிதான்” என்ற பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவுக்கு ஒரு பிரதமர்தான் தேவை. வாட்ச்மேன் அல்ல” என்று கூறியிருக்கிறார்.

ஒன்று சேர்ந்த திரைப்பட கலைஞர்கள்

அனுராக் காஷ்யப் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் அமோல் பாலேகர் மற்றும் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்களும் சேர்ந்து கையெழுத்திட்டு  கடிதம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர். அதில், இந்தியாவுக்கும் அதன் அரசமைப்பு சட்டத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் “பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆட்சியில் இருந்து அகற்றுங்கள்” என்று  மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: