கோவை டெண்டர், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை மாநகர டெண்டர் தொடர்பாகவும், பொள்ளாச்சியில் 200 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாகவும் தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்கக்கோரிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அப்போது, கோவை மாநகராட்சியில் பல்வேறு டெண்டர்கள் விடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக பேசி வருகிறார். அதுமட்டும் அல்லாமல் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திலும் என்னை தொடர்புபடுத்தி பேசி வருகிறார்.

  கோவை குனியமுத்தூர், தொண்டாமுத்தூர், கொடிசியா மைதானம், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மு.க.ஸ்டாலின் பேசும் போது “முதலமைச்சர் எடப்பாடியை விட ஊழல் நிறைந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் ஊழலில் கில்லாடி. தற்போது வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு காரணமே இவர்தான். எல்லா இடங்களிலும் ஊழல் செய்து வருகிறார். ₹100 கோடிக்கும் அதிகமாக உள்ள அனைத்து ஒப்பந்தங்களையும் தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கே கொடுத்து வருகிறார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய பார் நாகராஜ் என்பவர் அமைச்சருக்கு நெருங்கியவர். பொள்ளாச்சி என்றாலே தலைகுனிவுதான்” என்று பேசியுள்ளார்.  அவரது பேச்சு தனிப்பட்ட முறையில் என்னை களங்கப்படுத்தி உள்ளது. எனவே, கோவை மாநகராட்சி ஒப்பந்தம் மற்றும் பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க வேண்டும். எனக்கு மான நஷ்டஈடாக ரூ.1 கோடி தருமாறு மு.க.ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்.

 இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வக்கீல், ‘நீதிபதியிடம் மு.க.ஸ்டாலின் பேச தடைவிதிக்க வேண்டும்’ என்றார்.  இதைக்கேட்ட நீதிபதி, ‘‘தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வைப்பது சகஜம்தான். கருத்துக்களை தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது.  

 கருத்து சுதந்திரத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நேற்று கூட ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது.  இந்த வழக்கில், மு.க.ஸ்டாலின் தரப்பு வரும் 16ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடுகிறேன்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: