அதிமுக பெண்களே ஏற்க மாட்டார்கள்..அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான விஜயதரணி

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நாட்டில் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளம் பெண்களை எடுத்துக் கொண்டால், அவர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பயமுறுத்தியும் நடந்த பாலியல் துன்புறுத்தல் என்பது எல்லாவற்றையும் விட கொடுமையான ஒன்று. ஒரு பெண் என்ற முறையிலும், பிள்ளையை பெற்ற தாய் என்ற முறையிலும் இந்த விஷயங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எந்த குடும்பமும் இதை ஏற்று கொள்ள மாட்டார்கள். அதிமுகவை சார்ந்த பெண்களும், ஆண்களுமே இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். அது யாராக இருந்தாலும், சரியான புலானாய்வு நடத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

 தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி. எவ்வளவு செல்வாக்கு பெற்ற நபராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். அதை தான் பெண்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரம் அதிமுகவுக்கு ஒரு சறுக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.  எதிர்கட்சிகளின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகே பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ்பி மாற்றப்பட்டார். இதனால் அதிமுக தலையீடு இருக்குமோ? என்ற அச்சம் எழுந்தது. இந்த விசாரணையில் யார் தலையீடும் இருக்கக்கூடாது என்பது தான் பெற்றோர்களின் கோரிக்கை. பாதிக்கப்பட்ட பெண் பெயருள்ள அரசாணையை திரும்ப பெற்று பெயரில்லாமல் மீண்டும் அதை வெளியிட வேண்டும். முதல்வர் அது பற்றி ஆலோசனை செய்ய வேண்டும்.

பாரபட்சம் காட்டவில்லை...அதிமுக இலக்கிய அணி மாநில துணை செயலாளர் டாக்டர் நிர்மலா அருள்பிரகாசம்

பொள்ளாச்சி சம்பவம் யாராலும் ஏற்றுக்ெகாள்ள முடியாத ஒன்று. பல ஆண்டுகளாக  பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைக்கு ஆளாக்கிய கயவர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றம். இந்த சம்பவத்தை யாராக இருந்தாலும் கண்டிக்கத் தான் செய்வார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கும்.  இதுபோன்ற சம்பவங்களுக்கு சமூக வலைதளங்கள் தான் பெரும் பங்காற்றுகின்றன என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். நாட்டில் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது நல்லதல்ல. இதற்கான தீர்வு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தை விட கடுமையாக தண்டிக்கப்பட்டாக வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த வழக்கில் காவல்துறை நேர்மையாக விசாரணை நடத்தி வருகிறது.

 தமிழக அரசை பொறுத்த வரைஇந்த வழக்கில் தமிழக அரசு எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனையை தமிழக அரசு பெற்றுத்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒவ்வொருவரும் சமூக அக்கறையுடன் செயல்பட்டால் தான் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதே என் கருத்து. இந்த விவகாரத்தை அரசியலாக்காமல் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நாம் மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  மேலும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் குற்றம்சுமத்துவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. எனவே நம் ஒவ்வொருவர் வீட்டிலும் பெண்கள் இருக்கின்றனர் என்ற எண்ணத்தோடு எந்த பெண்ணிற்கும் இத்தகைய அவலங்கள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: