கிராமப்புறங்களில் எல்.எஸ்.எஸ் என ஸ்டிக்கர் ஒட்டி அரசு பஸ்களில் திடீர் கட்டண உயர்வு: பயணிகள் கடும் அதிருப்தி

வேலூர்: தமிழகத்தில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் எல்.எஸ்.எஸ் ஸ்டிக்கர் ஒட்டி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் 380 பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகளில் இருந்து 17 ஆயிரத்திற்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களுக்கு மட்டும் 6 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கல்வி, தொழில், மருத்துவம் உட்பட அனைத்து தேவைகளுக்கும் கிராமப்புற மக்கள் அரசு பஸ்களை நம்பியுள்ளனர். ஒரு நாள் பஸ் வராவிட்டாலும் கிராமப்புற மக்கள் கடும் அவதிக்குள்ளாவார்கள்.

கூலித்தொழிலாளியாக இருந்தால் அவர்கள் பணியே அன்றைய தினம் பாதித்து விடும். இப்படி கிராமப்புறங்களுக்கு அத்தியாவசிய தேவையாக அரசு பஸ்கள் உள்ளன. இந்நிலையில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் திடீரென எல்எஸ்எஸ் (லிமிடெட் ஸ்டாப்பிங் சர்வீஸ்) ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, ரூ. 5 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிற்கும் ரூ. 1 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும்  பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். லிமிடெட் ஸ்டாப்பிங் சர்வீஸ் என்றால் குறிப்பிட்ட இடங்களில், ஏற்கனவே உள்ள நேரத்தை விட விரைவாக கொண்டு சென்று பயணிகளை இறக்கிவிட வேண்டும். ஆனால் தற்போது கட்டணத்தையும் உயர்த்திவிட்டு, பஸ்களும் சரியான முறையில் இயக்காமல் உள்ளதாக பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 42 மாதமாக பென்ஷன் வழங்கவில்லை. கடுமையான நிதிநெருக்கடியில் போக்குவரத்து கழகம் உள்ளது. இதனால் காலாவதியான சாதாரண பஸ்களுக்கு எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், பாய்ண்ட் டூ பாய்ண்ட் என்று ஸ்டிக்கர் ஒட்டி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கிராமப்புற பஸ்களுக்கும் எல்எஸ்எஸ் ஸ்டிக்கர் ஒட்டி கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்’ என்றனர்.

பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் எல்எஸ்எஸ் பஸ் மாற்றம்:

அணைக்கட்டு தாலுகா அகரராஜபாளைத்தில் இருந்து வேலூருக்கு பஸ் எண்:13. வரதலம்பட்டு முதல் வேலூர் வரை பஸ் எண்: 13ஏ இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களுக்கு எல்எஸ்எஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டி கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் டெப்போவிற்கு போன் செய்து, எல்எஸ்எஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளீர்களே, அரசு ஏதேனும் இந்த ஸ்டிக்கர் ஒட்டி கட்டண உயர்வுக்கு உத்தரவிட்டுள்ளதா?, அதற்கான அரசு ஆணை நகல் உள்ளதா? இந்த ஸ்டிக்கர் ஒட்டி அதிக கட்டணம் வசூலித்தால் பஸ்சை சிறைப்பிடிப்போம். கட்டண உயர்வுக்கான நகலுடன் வந்தால்தான் பஸ்சை விடுவோம் என்று கூறியுள்ளனர். உடனே அடுத்த நாள் முதல் அப்பகுதிக்கு எல்எஸ்எஸ் ஸ்டிக்கர் இல்லாத பஸ்சை இயக்கியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: